இத்தாலியிலிருந்து இந்தியா வந்த 16 பேருக்கு கொரோனா இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை இன்று காலை உறுதி செய்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சீனா, தென் கொரியாவைத் தொடர்ந்து இத்தாலியில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது, இந்நிலையில் இத்தாலியிலிருந்து ராஜஸ்தானுக்கு 21 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அவர்களைப் பரிசோதித்ததில் 15 பேருக்கு கொரோனா இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று (மார்ச் 4) மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், இந்தியா வந்த இத்தாலியைச் சேர்ந்த 16 பேருக்கும், அவர்களுடன் வந்த இந்திய ஓட்டுநர் ஒருவருக்கும், ஆக்ராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கும், கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கும், தெலங்கானாவில் ஒருவருக்கும், டெல்லியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
”டெல்லியில் அனைத்து மருத்துவமனைகளிலும் நல்ல தரமான தனிமைப்படுத்தும் வார்டுகளை உருவாக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ள அவர், சீனா, இத்தாலி என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 12 நாடுகள் உட்பட, தற்போது இந்தியா வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் கண்காணிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
”கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சோதனை மேற்கொள்ள 15 ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 19 ஆய்வகங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதனிடையே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர்கள் கூட்டம் இன்று (மார்ச் 4) டெல்லியில் நடைபெறவுள்ளது.
கொரோனா பரவி வரும் நிலையில், இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ”வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்காகப் பலர் ஒன்றுக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனவே, இந்த ஆண்டு எந்த ஹோலி நிகழ்ச்சியிலும் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஹோலி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் கொரோனா பரவலைத் தடுக்க பொது இடங்களில் கூட வேண்டாம். குடும்பத்துடன் கொண்டாடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
வடமாநிலங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை இந்த ஆண்டு வரும் 9 மற்றும் 10ஆம் தேதி வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் ஹோலி பண்டிகையும் களையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
**கவிபிரியா**
�,”