தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இன்று (பிப்ரவரி 27) தெரிவித்துள்ளது.
5 மாநிலத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரச்சாரம், தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில், “நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,59,590 ஆக உள்ளது. இது நாட்டின் ஒட்டு மொத்த பாதிப்பில் 1.44 சதவிகிதமாகும்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,488பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 85.75 சதவிகிதம் பேர் மேற்குறிப்பிட்ட 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று காலை 7 மணி வரை, தமிழகத்தில் 4,45,328 பேர், புதுச்சேரியில் 11,144 பேர் உட்பட, நாடு முழுவதும் 1,42,42,547 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
2,92,312 முகாம்களில் 66,68,974 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 24,53,878 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 51,19,695 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,63,451 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97.17 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 12,771 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “சென்னை கோவை செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தொற்று அதிக அளவு பரவுவதைக் காணமுடிகிறது. தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 0.48 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தாலும் தற்போதைய நிலை அச்சம் தரும் வகையில் உள்ளது” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**�,