|கொரோனா: 33% தப்லீக் ஜமாத்தின் பங்கு – மத்திய அரசு!

Published On:

| By Balaji

கொரோனா விவகாரத்தில் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் 33% தொற்று டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நடந்த தப்லீக் ஜமாஅத்தோடு தொடர்புடையவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஏப்ரல் 4) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுவரை, இந்தியாவில் 3,072 கொரோனா பாசிட்டிவ் நபர்களில் 1,023 பேர் அந்த ஒரு குறிப்பிட்ட மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் அல்லது அவர்களின் நேரடித் தொடர்புடையவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம், டெல்லி, ஆந்திரம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரம், கர்நாடகம், அசாம், உத்தரகண்ட், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கேரளம், அருணாசலப் பிரதேசம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்களில் இதுவரை தப்லீக் மாநாட்டால் தொற்று ஏற்பட்டவர்கள் கண்டறியப்பட்டிருக்கிறார்கள்.

அதாவது நாட்டில் உள்ள அனைத்து கொரோனா பாசிட்டிவ்களில் 33% இந்த ஒரு சம்பவத்துடன் தொடர்புடையது. எங்களைப் பொறுத்தவரை, இது ஒரு தினசரி யுத்தமாக இருக்கிறது. இந்த 17 மாநிலங்களிலும் டெல்லி சென்று வந்தவர்களின் தொடர்புத் தடமறிதல் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு நபர் தன்னை மறைத்துக்கொண்டால்கூட அது நம்மை மிகப் பெரிய அளவில் பின்னுக்குத் தள்ளும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார் லவ் அகர்வால்.

மார்ச் முதல் வாரத்திலிருந்து, நூற்றுக்கணக்கான தப்லீக் ஜமாஅத் ஆர்வலர்கள் அதன் நிஜாமுதீன் தலைமையகத்தில் ஒரு மத நிகழ்ச்சிக்காக கூடியிருந்தனர். இந்த மத நிகழ்வில் சுற்றுலா விசாவில் பங்களாதேஷ் (493), இந்தோனேசியா (472), மலேசியா (150) மற்றும் தாய்லாந்து (142) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் டெல்லி நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஈரோடு, சேலம், மதுரை என்று தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றிருக்கிறார்கள்.

இதே நேரம் நேற்று தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்று (ஏப்ரல் 4) ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் இதுவரை 422 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று பாதிப்பு உறுதியான 74 பேரில் 73 பேர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள்” என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி நேற்று வரை தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உள்ளது.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share