இந்தியாவில் கடந்த நான்கு நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 9 லட்சத்தை கடந்துள்ளது. தொடர்ந்து 5 ஆவது நாளாக ஒரு நாள் பாதிப்பு 26,000த்தை கடந்துள்ளது.
ஜூலை 11ஆம் தேதி இந்தியாவில் மொத்த பாதிப்பு 8லட்சத்தை கடந்தது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களில் இன்று (ஜூலை 14) 9,06,752 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று 553 பேர் உட்பட இதுவரை 23,727 பேர் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 17,989 பேர் குணமடைந்துள்ள நிலையில், மொத்தமாக கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5,71,459ஆக அதிகரித்துள்ளது. 3,11,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவால் உயிரிழந்த 70 சதவிகிதம் பேருக்கு கோமார்பிடிட்டி இருந்ததாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், “ஜூலை 13ஆம் தேதி 2.86 லட்சம் மாதிரிகள் உட்பட இதுவரை 1.2 கோடி மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை பதிவான மொத்த இறப்புகளில் மகாராஷ்டிராவில் 10,482 பேரும், டெல்லியில் 3,411 பேரும், குஜராத்தில் 2,055 பேரும் மற்றும் தமிழகத்தில் 2,032 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**-கவிபிரியா**�,