உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் இன்று (ஜனவரி 16) தொடங்கப்பட்டது. தமிழகத்தில் முதல் தடுப்பூசியை மருத்துவர் சங்க மாநிலத் தலைவர் செந்தில் செலுத்திக்கொண்டார்.
கொரோனாவுக்கு மருந்து எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இன்று முன்கள பணியாளர்களுக்கு முதல்கட்டமாகத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
நாடு முழுவதும் 3,000 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த மாபெரும் திட்டத்தை இன்று காலை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், “ இந்தியாவில் மிகக் குறைவான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இவை. இதன் மூலம் இந்தியாவின் திறமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் மற்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டதைக் காட்டிலும் மலிவானவை. முதல்கட்டமாக 3 கோடி முன் களப் பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 30 கோடி பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் மொத்த மக்கள் தொகையே 30 கோடிதான்.
முதல் டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொண்டவுடன், யாரும் மாஸ்க் பயன்படுத்தாமல் இருக்கும் தவறையோ அல்லது சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருக்கும் தவறையோ செய்ய வேண்டாம். காரணம் 2ஆம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகுதான் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளுக்குச் செவி சாய்க்க வேண்டாம். இந்தியாவின் மருத்துவ அமைப்பு நம்பிக்கை வாய்ந்தது” என்று தெரிவித்தார்.
பிரதமர் தொடங்கி வைத்ததும் அனைத்து மாநில முதல்வர்கள் சார்பில் அந்தந்த மாநில முதல்வர்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி வைத்தனர். தமிழகத்தில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
முதல் தடுப்பூசியானது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் மருத்துவர் சங்க மாநிலத் தலைவர் செந்திலுக்குச் செலுத்தப்பட்டது. அவரைத் தொடர்ந்து ராஜாஜி மருத்துவமனையின் டீன் சங்கு மணிக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இங்குத் தடுப்பூசி பணி தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 160 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியும், 6 மையங்களில் கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தும் பணி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு மையத்திலும் இன்று 100 பேருக்கு ஊசி செலுத்தப்படவுள்ளது.
சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், அக்குழுமத்தின் தலைவரான பிரதாப் சி ரெட்டி தடுப்பூசி செலுத்திக் கொண்டார். பொது மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்து அச்சம் நிலவி வந்த நிலையில் 87 வயதான பிரதாப் சி ரெட்டி தடுப்பூசி செலுத்திக் கொண்டு தம்ஸ் சப் காட்டியது அனைவரிடத்திலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தடுப்பூசி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “நம் உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களே தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போது நானும் நிச்சயமாகப் போட்டுக்கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார். பிரதமரின் விடா முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர் மனிஷ் குமார் முதல் நபராக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணியை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அங்கு முனுசாமி என்கிற மருத்துவ ஊழியருக்கு முதலில் செலுத்தப்பட்டது.
**-பிரியா**�,”