wமுதல் நாளில் 1.91 லட்சம் பேருக்குத் தடுப்பூசி!

Published On:

| By Balaji

நாடு முழுவதும் 1.91 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய மக்கள் அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட கொரோனா தடுப்பூசி தமிழகம் உட்பட நாடு முழுவதும் நேற்று பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்த கோவிஷீல்டு அனைத்து மாநிலங்களுக்கும், பாரத் பயோடெக்கின் கோவேக்சின் 12 மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டன. இரண்டு தடுப்பூசிகளைக் கொண்டு நாடு முழுவதும் 3,351 அமர்வுகள் நடத்தப்பட்டன.

தமிழகத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் 1.91 லட்சம் பேருக்குச் செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் யாரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2,783 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. இவர்கள் 30 நிமிடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இவர்களுக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. முதல் நாள் என்பதால் நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தன. நாளை முதல் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சுடன் நடைபெறும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் , “இந்தியாவில் கொரோனா நோய் தொற்றிலிருந்து அதிக அளவில், 96% பேர் குணமடைந்திருப்பதாகவும், குறைந்த இறப்பு வீதமாக 1.5% பதிவாகி இருப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை வெற்றிக்கான பாதை என்று குறிப்பிட்ட அவர், “கொரோனா தொற்றிலிருந்து குணமடைவதற்கான சஞ்சீவினியாக இந்த தடுப்பூசி நினைவுகூரப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share