sஜனவரி 13 முதல் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு!

Published On:

| By Balaji

இந்தியாவில் ஜனவரி 13ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 16,375 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1 கோடியே 3 லட்சத்து 56 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,031,36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே நாளில் 29 ஆயிரத்து 91 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 99,75 ,958 ஆக அதிகரித்துள்ளது.எனினும் கடந்த 24 மணிநேரத்தில் 201 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,49, 850 ஆக உள்ளது.

இதனிடையே, கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர மத்திய சுகாதாரத் துறை தீவிரம் காட்டி வந்தது. அதன்படி, அஸ்ட்ராஜெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் இணைந்து தயாரித்த, இந்தியாவின் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்த கோவிஷீல்டு மற்றும் உள் நாட்டு தயாரிப்பு மருந்தான பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஜனவரி 3ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சக பிரதிநிதிகள் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகையில் கிடைத்த கருத்துகளின்படி, அவசரக் கால பயன்பாட்டுக்கு அனுமதியளிக்கப்பட்ட நாளிலிருந்து 10 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்த அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஜனவரி 13ஆம் தேதி முதல் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், “கர்னல், மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய 4 இடங்களில் ஜி.எம்.எஸ்.டி எனப்படும் பிரதான தடுப்பூசி மையங்கள் உள்ளன. நாட்டில் மொத்தம் 37 தடுப்பூசி மையங்கள் உள்ளன. இங்கு தடுப்பூசிகளை மொத்தமாகச் சேமித்து வைத்து விநியோகிக்கப்படும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளச் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் பதிவு செய்ய தேவையில்லை” என்று ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share