T2020க்குள் கொரோனா தடுப்பூசி: சீனா!

Published On:

| By Balaji

உலகம் முழுவதும் கொரோனாவால், 22,309,795 பேர் பாதிக்கப்பட்டு, இன்று (ஆகஸ்ட் 19) வரை 7,84,380 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய மூன்று நாடுகள் பாதிப்பில் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 27,68,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,026 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா போராட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் உலக மக்களுக்கு தற்போது, கொரோனா தடுப்பூசி என்பது மிக அவசியமானது. இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் கொரோனா மருந்தை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி நோயாளிகளுக்குச் செலுத்தப்படும் என்று சீன தேசிய மருந்துக் குழு நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன அரசு மருந்து நிறுவனமான சினோபார்ம் தலைவர் கூறுகையில், “Ad5-nCov5 என்ற கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பின் சந்தை படுத்தலுக்கான மறு ஆய்வு நடைமுறை தொடங்கும். நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் இந்த ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் நகர்ப்புறத்தில் உள்ள சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும்.

நானும் இரண்டு முறை இந்த தடுப்பூசியை சோதனைக்காக போட்டுக்கொண்டுள்ளேன். இதில் எந்த பக்க விளைவும் இல்லை.

முதல் ஊசி போட்டுக்கொண்ட பிறகு 28 நாட்கள் கழித்து 2ஆவது ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும், 4 மைக்ரோகிராம் மருந்துகள் உடலுக்குச் செலுத்தப்படும். இந்த இரண்டு முறைக்கும் சேர்த்து சீன மதிப்பு 1000 யுவானுக்கு குறைவாகச் செலவாகும். (இந்திய மதிப்பு கிட்டதட்ட ரூ.11,000 ஆகும்). இந்த ஆண்டு டிசம்பருக்குள் மருந்து சந்தைக்கு வந்துவிடும். ஆண்டுக்கு 22 கோடி தடுப்பூசிகளைத் தயாரித்து வழங்கும் ஆற்றலை சினோபார்ம் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே ரஷ்யா தான் கண்டுபிடித்த மருந்தை அனைத்து சோதனைக்கு உட்படுத்தி, தற்போது உற்பத்தியைத் தொடங்கியிருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில், கொரோனாவுக்காக தயாரிக்கப்பட்ட மருந்து வலுவான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது, மற்றும் நான் மீண்டும் சொல்கிறேன், அது தேவையான அனைத்து சோதனைகளையும் கடந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் ரஷ்ய மருந்து குறித்து பல்வேறு மருத்துவ வல்லுநர்களும் கவலைத் தெரிவித்து வருகின்றனர். தடுப்பூசி தேசிய வலிமையின் அடையாளமாக கொண்டுவரப்படவுள்ளதாகவும், இது பாதுகாப்பற்றதாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். அதுபோன்று ரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனம், “ரஷ்யத் தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்றும், அதுதொடர்பான விவரங்கள் தங்களிடம் இல்லை என்றும் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share