{இந்தியா: 10 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!

Published On:

| By Balaji

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரு நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 30,000த்தைக் கடந்து பதிவாகி வருகிறது. புதிதாக 32,695 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் , மொத்த பாதிப்பு 9,68,876ஆக அதிகரித்தது என்று நேற்று (ஜூலை 16) காலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த நிலையில் நேற்று மாலை அனைத்து மாநிலங்களும் கடந்த 24 மணி நேரப் பாதிப்பு குறித்த பட்டியலை வெளியிட்டது.

அதன்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்துள்ளது. மகாராஷ்டிராவில் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சமாக ஒரு நாளில் மட்டும் 8,641 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,84,281 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,14,648 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,58,140 பேர் குணமடைந்துள்ளனர். 11,194 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் புதிதாக 4,549 பேர் உட்பட மொத்தம், 1,56,369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 46,717 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,07,416 பேர் குணமடைந்துள்ளனர். 2,236 பேர் பலியாகியுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் புதிதாக 1,652 பேர் உட்பட மொத்தம் 1,18,645 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 97,693 பேர் குணமடைந்துள்ளனர். 17,407 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,545 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில் நாடு முழுவதும் புதிதாக நேற்று ஒரே நாளில் 34,214 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 10,04,383ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,42,022 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,36,569 பேர் குணமடைந்துள்ளனர். 25,609 பேர் உயிரிழந்துள்ளனர் என்று www.covid19india.org என்ற இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 30ஆம் தேதி கேரளாவில் முதல் தொற்று கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பரவத் தொடங்கிய நிலையில், தற்போது 10 லட்சத்தைக் கடந்துள்ளது. உலக நாடுகள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இந்தியா இருந்தாலும், நேற்று ஒரு நாள் பாதிப்பில் அமெரிக்காவை இந்தியா முந்தியிருப்பது வோர்ல்டோமீட்டர் தகவல் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் புதிதாக 32,134 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் 34,214 பேருக்குக் கண்டறியப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் இருக்கும் பிரேசிலில் நேற்று ஒரு நாளில் 7,327 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இவ்வாறு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 63.25 சதவிகித பேர் குணமடைந்துள்ளனர் என்றும் ஐசியுவில் 2 சதவிகிதத்துக்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெறுகின்றனர் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share