Wகொரோனா அச்சம்: ஐபிஎல் நடைபெறுமா?

Published On:

| By Balaji

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,387ஆக இருக்கிறது. இதன் பாதிப்பு காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தி வருகிறது.

இதுமட்டுமின்றி பல பொது நிகழ்ச்சிகள் , கண்காட்சிகள், போட்டிகள் ரத்து செய்யப்படுகின்றன. மருத்துவ நிபுணர்கள் பொது இடங்களுக்குச் செல்வதையும், கூட்டங்களில் கலந்துகொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் பொது இடங்களில் ஒன்றாகக் கூடுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. குறிப்பாக கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள சீனாவில் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் பிப்ரவரி மாதம் 24-27 ஆம் தேதிகளில் நடத்தப்படுவதாக இருந்த உலகின் மிகப்பெரிய மொபைல் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. ஃபேஸ்புக் சார்பில் வரும் மார்ச் 9 முதல் 12 வரை நடைபெற விருந்த உலகளாவிய சந்தைப்படுத்துதல் உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் நிலையில் வரும் மார்ச் 29ஆம் தேதி இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 13ஆவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் என்றும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கும் என்றும் தகவல் வெளியானது.

இதற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் கிரிக்கெட் ரசிகர்கள், வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் இந்தியாவுக்கு வருகை தருவார்கள் என்பதால் இதன் காரணமாக கொரோனா பரவ வாய்ப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. போட்டிகளுக்கு வீரர்கள் ஆயத்தமாகி வரும் நிலையில் அறிவித்தபடி மார்ச் 29ஆம் தேதி ஐபிஎல் நடைபெறுமா என்று கேள்வி எழுந்தது.

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ”ஐபிஎல் போட்டி மார்ச் 29ஆம் தேதி நடைபெறும், கொரோனா வைரசுக்கு எதிராகத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று விளையாட்டு செய்தி வலைத்தளமான ESPNcricinfo-விடம் தெரிவித்துள்ளார்.

”அரசு பரிந்துரைத்தபடி அனைத்து நடவடிக்கைகளையும் கிரிக்கெட் வாரியம் சார்பில் எடுக்கப்படும். வீரர்கள், உரிமையாளர்கள், ஹோட்டல்கள், ஒளிபரப்புக் குழுக்கள் என அனைவருக்கும் அரசால் பரிந்துரைக்கப்பட்ட கைட்லைன்ஸ் அனுப்பப்படும்” என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவைத் தொடர்ந்து அதிக பாதிப்பு இருக்கும் இத்தாலியில் சீரி ஏ கால்பந்து போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

**ஹைதராபாத் காக்னிசண்ட் மூடல்**

ஹைதராபாத்தில் ரஹேஜா மைண்ட் ஸ்பேஸ் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தற்காலிகமாக அலுவலகம் மூடப்படுவதாகவும், மீண்டும் முறையான அறிவிப்பு வரும் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்றும் தனது ஊழியர்களுக்கு காக்னிசண்ட் மெயில் அனுப்பியுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் அமெரிக்க இந்திய மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான சோஹோ கார்ப்பும் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. பிரான்ஸ், இத்தாலி, சுவீடன், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் அலுவலகங்களைக் கொண்ட இந்நிறுவனத்தில் உலகளவில் சுமார் 7,500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

**மாஸ்க்குடன் மக்களவைக்கு வரும் எம்.பி.**

கொரோனா அச்சத்தால் பொது இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நடிகையும் சுயேச்சை எம்பியுமான நவ்நீத் ரானா, நாடாளுமன்றத்திற்கு வரும் போது முகக்கவசம் அணிந்து வருகிறார். இதுபோன்று முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டு மக்களுக்கு உதாரணமாக மாறி வருகிறார்கள் சில நாடாளுமன்ற எம்.பி.க்கள். காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் கைக்குலுக்குவதைத் தவிர்த்து ஒருவருக்கு ஒருவர் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

**கவிபிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share