sஅனைத்துக்கும் கொரோனா ரிப்போர்ட் கட்டாயமா?

Published On:

| By Balaji

ஆதார் அட்டை கட்டாயம் என்பது போல் கொரோனா டெஸ்ட் ரிப்போர்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் அம்மாநில மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா தொற்று பரவாமலிருக்க அரசு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது.

தற்போது புதுச்சேரியில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேர்க்கைக்கு வரும் பெற்றோர்கள் சாதிச் சான்று, வருமான சான்று, மற்றும் குழந்தைக்கு மெடிக்கல் ரிப்போர்ட் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மடுகரையைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது பிள்ளையை அங்கிருக்கும் ஒரு பள்ளியில் சேர்க்கச் சென்றுள்ளனர். அப்போது ஹெல்த் ரிப்போர்ட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். அதைப் பார்த்த ஆசிரியர்கள், ‘ஹெல்த் ரிப்போர்ட் என்றால் இதுவல்ல. கொரோனா டெஸ்ட் ரிப்போர்ட் வேண்டும்’ என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதுபோன்று தற்போது அனைத்து துறைகளிலும் கொரோனா ஹெல்த் ரிப்போர்ட் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரிதான் அப்படியென்றால் தமிழகம் எப்படியிருக்கிறது என்று விசாரித்தோம், வரும் 27ஆம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டத்தில் கொரோனா சம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வாட்ச்மேன் முதல் அதிகாரிகள் வரையில் கட்டாயமாக கொரோனா டெஸ்ட் எடுக்கவேண்டும். கூட்டத்தில் கலந்துகொள்ளும் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள், பாதுகாப்புப் பணிக்குச் செல்லும் காவலர்கள் அனைவரும் கொரோனா டெஸ்ட் ரிப்போர்ட் முன்கூட்டியே கொடுக்கவேண்டும் என்று அவசர உத்தரவு போடப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் கலந்துகொள்ளும் விழாவில் பங்கேற்று உதவி பெறும் கிராமப்புற பெண்களுக்கும் கூட தேடி வந்து கொரோனா டெஸ்ட் எடுத்துவருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சென்றுள்ளார், அவரைப் பார்த்த மருத்துவர், உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் கொரோனா டெஸ்ட் ரிப்போர்ட் எடுத்துட்டு வாங்க அதன் பிறகுதான் சிகிச்சையளிக்க முடியும் என்று கூறி அனுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் இதே நிலைதான். ஆதார் அட்டை கட்டாயம் என்ற நிலைமாறி தற்போது கொரோனா டெஸ்ட் ரிப்போர்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் மத்திய அரசு ஊழியர்களில் சிலர்.

**-எம்.பி.காசி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share