கொரோனா பரிசோதனை குச்சி உடைந்ததால் உயிரிழந்த குழந்தை!

Published On:

| By Balaji

சவுதி அரேபியாவில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது பரிசோதனை குச்சி உடைந்ததால் அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் காய்ச்சல் காரணமாக தங்கள் குழந்தையை அங்கிருக்கும் பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் பெற்றோர். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காகப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். பரிசோதனைக்குப் பயன்படுத்தப்படும் மூக்கினுள் விடப்படும் குச்சியைக் குழந்தையின் மூக்கில் நுழைத்ததும் குச்சி உடைந்துள்ளது. இந்தக் குச்சியை வெளியில் எடுக்க குழந்தைக்கு மயக்க மருந்தை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். இதனால் குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் குழந்தை தனது சுயநினைவையும் இழந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 24 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை உயிரிழந்த தகவல் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து குழந்தையின் தந்தை அப்துல்லா அல் ஜவுபான் கூறுகையில், “தொடக்கத்திலேயே குழந்தைக்கு மயக்க மருந்தைக் கொடுக்க நான் அனுமதிக்கவில்லை. ஆனால், மருத்துவர்கள் இதை வலியுறுத்தினார்கள். குச்சியை எடுக்க அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, குழந்தைநல மருத்துவர் குழந்தையைப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றேன். அதற்கு சிறப்பு மருத்துவர் விடுப்பில் இருப்பதாகவும், சுவாசக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகக் குழந்தை சுய நினைவை இழந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைவதாக உணர்ந்ததும் குழந்தையைச் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கேட்டுக்கொண்டேன். அனுமதி கிடைத்ததும், ஆம்புலன்ஸ் வருவதற்குத் தாமதமாகிவிட்டது. இதனிடையே, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று கூறியுள்ளார்.

குழந்தையின் மரணம் மற்றும் நிலைமையைத் தவறாகக் கையாண்டது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குழந்தையின் பெற்றோர் போலீஸுக்குத் தகவல் சொல்ல, வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

**-ராஜ்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share