rசீனாவில் மீண்டும் கொரோனா: மூடப்பட்ட சந்தை!

Published On:

| By Balaji

கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை துவங்குகிறதோ என்ற அச்சத்தில் சீனாவின் பீஜிங்கில் உள்ள மிகப்பெரிய காய்கறி மற்றும் இறைச்சி சந்தை ஒன்று மூடப்பட்டு உள்ளது.

அதேபோல் அருகிலுள்ள மக்கள் வசிக்கும் 11 பகுதிகளும் ஊரடங்குக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. அந்தப் பகுதியில் இருந்து பெறப்பட்ட 517 மாதிரிகளில் 45 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. அங்கு இருந்த வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நியூக்ளிக் ஆசிட் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு தொற்று உள்ளதா என்பதை கண்டறிய சோதனைகள் நடைபெற்று வருவதாக சனிக்கிழமை சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த மார்க்கெட்டின் சேர்மன் பீஜிங் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, மீனின் ஒரு வகையான சால்மனை நறுக்கும் பலகையில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த மீன் வகையை விற்பனை செய்வதை பெரும்பாலான வணிக மார்க்கெட்டுகள் நிறுத்தி உள்ளன.

21 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பீஜிங்கில் கடந்த 55 நாட்களில் ஒரு புதிய கொரோனா தோற்று கூட கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த வாரம் 52 வயது நபர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் கண்டறியப்பட்டுள்ளார். அடுத்த 48 மணி நேரத்தில் ஆறு புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் அந்தப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.

கண்டறியப்பட்ட புதிய கொரானா வைரஸ் பாதிப்படைந்தவர்கள் தற்போது மூடப்பட்டுள்ள மார்க்கெட்டிற்கு சென்று வந்தவர்களாக இருந்துள்ளனர். தொடர்ச்சியாக மார்க்கெட்டுக்கு சென்று வந்த மூன்று நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறிய பட்டதன் விளைவாக தற்போது அந்த மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு வெளியிலுள்ள கட்டடம் ஒன்றும் மூடப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மார்க்கெட்டின் வாகனங்கள் நிறுத்தும் பகுதிக்குக் கூட மக்களை செல்லவிடாமல் காவல்துறையினர் மற்றும் செக்யூரிட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த மார்க்கெட்டுடன் தொடர்புடைய அனைவருக்கும் நியூக்ளிக் ஆசிட் சோதனை மேற்கொள்ளப்படும் என்று சனிக்கிழமை காலை வெளியான அந்த பகுதி அதிகாரியின் அறிக்கை தெரிவிக்கிறது. 112 ஏக்கரில் அமைந்துள்ள இந்த பெரிய மார்க்கெட்டானது 1500 வேலை செய்பவர்களையும் மற்றும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பவர்களையும் கொண்டுள்ளது என்று சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த சுற்றுப்புறத்தில் உள்ள பள்ளிகளை திறக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அடுத்த திங்கள்கிழமை வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று அந்தப் பகுதியின் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். மேலும் வைரஸ் பாதிப்பிற்கான மூலம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து அந்த சங்கிலி உடைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

”எந்த இடத்திற்கும் பயணம் செய்யாத 52 வயது நபருக்கு கொரோனா வந்தது எங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. போர்க்கால நடவடிக்கைகளை உடனடியாக துரிதப்படுத்தி இரண்டாவது முறையாக கொரோனா பரவுவதை தடுப்போம்” என்று உள்ளூர் அதிகாரிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து அந்த பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து விதமான விளையாட்டு போட்டிகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 24 மணிநேரங்களில் 11 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில் 83 ஆயிரத்து 75 ஆக உயர்ந்துள்ளது, சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 634 உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் கடல் உணவுச் சந்தையில் முதன் முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. பிறகு உலகம் முழுவதும் பரவியது குறிப்பிடத்தக்கது.

** பவித்ரா குமரேசன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share