Bகேரளாவை முடக்கிய கொரோனா!

Published On:

| By Balaji

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகபட்சமாகக் கேரளாவில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இதில் மாநிலத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பினராய் விஜயன், “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், மூன்று வயதுக் குழந்தை உட்படக் கேரளாவில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 149 மருத்துவமனைகளில் 1,116 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தேர்வு ரத்து

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒன்றாம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. 9, 10 மாணவர்களுக்குத் தேர்வு நடைபெறும். மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டால் தனி அறையில் தங்கவைக்கப்பட்டுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். கல்லூரிகள், மதராசாக்கள் மற்றும் டுட்டோரியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கும் இம்மாத இறுதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்

சபரிமலைக்கு அதிகம் செல்ல வேண்டாம்

சபரிமலையில் வரும் மார்ச் 14 -18 ஆம் தேதி வரை மாத பூஜை தொடங்கவுள்ளது. இந்நிலையில் முதல்வர் பினராய் விஜயன் சபரிமலைக்கு அதிகமாகச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, சபரிமலைக்குப் பக்தர்கள் வரவேண்டாம் என்று தேவசம் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது. அதுபோன்று மக்கள் அதிகம் கூடும் அளவிலான நிகழ்ச்சிகளைக் கேரளாவில் உள்ள கோயில்களில் நடத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திரையரங்குகள் மூடல்

மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, வரும் மார்ச் 31ஆம் தேதி வரை திரையரங்குகளை மூட வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டதை அடுத்து, ,மலையாள திரைத்துறை தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் கொச்சியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் வரும் 31ஆம் தேதி வரை திரையரங்குகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரள அரசுக்குக் கிடைக்கக் கூடிய வரி வருவாய் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தே வேலை

கொரோனா பாதிப்பால் கேரளாவில் உள்ள பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தி வருகிறது. இதனால், வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மாநிலத்தில் பிராட்பேண்ட் இணையம் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

தேக்கடி மூடல்

கேரளாவின் முக்கிய சுற்றுலாத் தலமான தேக்கடி வரும் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாகவும், படகு போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் பெரியார் புலிகள் காப்பகம் அறிவித்துள்ளது.

-கவிபிரியா�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share