பெங்களூரில் தவறான முகவரி கொடுத்துவிட்டு கொரோனா பாதிப்புக்குள்ளான 3,338 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் பற்றிய மற்ற தகவல் கிடைக்காததால் மாநகராட்சியின் சுகாதாரத் துறை ஊழியர்கள் திணறி வருகின்றனர். இது பெங்களூரு நகரவாசிகளிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. பெங்களூரில் தினமும் சராசரியாக 2,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதுபோல தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனைக்கு உள்ளாகும் நபர்கள் தங்களது முகவரி, செல்போன் எண்ணை தவறாகக் கொடுத்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பெங்களூரில் கொரோனா பாதிப்புக்குள்ளான 3,338 பேர் தவறான முகவரியைக் கொடுத்திருப்பதாக மாகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார். பரிசோதனை மேற்கொள்ளும்போது தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுவிடுவார்கள், குடும்பத்தைத் தனிமைப்படுத்தி விடுவார்கள் என்ற பயத்தில் பலர் தவறான தகவலைக் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.
இப்படி, பெங்களூரில் தற்போது தவறான தகவல் கொடுத்துவிட்டு கொரோனா பாதிப்புக்குள்ளான 3,338 பேர் மருத்துவமனையில் இருந்து சரியான சிகிச்சை பெறாமல் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் அனைவரும் எங்கு இருக்கிறார்கள், அவர்களது உடல் நிலை எந்த நிலையில் உள்ளது உள்ளிட்ட எந்த விவரங்களும் மாநகராட்சிக்குத் தெரியவில்லை.
இவ்வாறு கொரோனா பாதிப்புக்குள்ளான நபர்கள் சிகிச்சைக்கு பயந்து வெளியே சுற்றி திரிவதால், பெங்களூரில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து, 3,338 பேரையும் தேடி கண்டுபிடிக்கும் பணியில் மாநகராட்சியின் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பற்றிய மற்ற தகவல் கிடைக்காததால் ஊழியர்கள் திணறி வருகின்றனர். இது பெங்களூரு நகரவாசிகளிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
**-ராஜ்**�,