கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் தப்பி ஓடிய நிலையில் தொற்று இல்லாதவரை சுகாதாரத் துறையினர் அழைத்துச் சென்ற அவலம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.
சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து கடந்த 4ஆம் தேதி நள்ளிரவு 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விமானம் ஒன்று திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளைத் தனிமைப்படுத்தும் பொருட்டு, திருச்சியில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் சுகாதாரத் துறையினர் தங்க வைத்தனர். அந்தப் பயணிகளிடம் கொரோனா பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. அதில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுகாதாரத் துறையினர் ஒவ்வொரு ஹோட்டலுக்கும் சென்று தொற்றுக்கு ஆளான 12 பேரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருந்தவர்களில் கொரோனா பாதித்தவர்கள் பட்டியலிலிருந்த பெயர் உடைய நபரிடம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும்படி அழைத்தனர். அவரோ, தனக்கு தொற்று இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் வலுக்கட்டாயமாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சென்றதும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான நபர்களின் முகவரியை வைத்து சோதித்தபோது, தொற்று பாதிப்புடைய நபர் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் என்பதும், ஹோட்டலில் இருந்து அழைத்து வந்தவர் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இருவருக்கும் ஒரே பெயர் என்பதால் கொரோனா பாதித்தவரை அழைத்து வருவதற்குப் பதிலாக, மற்றொருவரை அழைத்து சென்றதும் தெரியவந்தது.
மேலும், கொரோனா பாதிப்புக்குள்ளான அந்த நாகப்பட்டினம் வாலிபர் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் இருந்து சிகிச்சைக்குச் செல்லாமல் தப்பி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தவறுதலாக அழைத்துச் சென்ற வாலிபரை கொரோனா வார்டில் வைக்காமல் அங்குள்ள தனிமைப்படுத்தும் வார்டில் வைத்தனர். அவருக்கு நேற்று (ஜூன் 9) மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் நெகட்டிவ் என வந்தால் உடனே வீட்டுக்கு அனுப்பி விடுவோம் என்றும், மேலும், கொரோனா பாதிப்புடன் தப்பி சென்றவரை பிடிக்க நாகை மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
**ராஜ்**�,