சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகில் 130 நாடுகளில் பரவி மக்களை மிரட்டி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளது, இதுவரை இரண்டு பேர் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தேசிய பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (மார்ச் 14) அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் நிவாரண நிதியாக அந்தந்த மாநில அரசுகள் சார்பில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே நிர்ணயிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் தற்காலிக தங்குமிடம், உணவு, உடை, மருந்துகள் ஆகியவற்றுக்கான செலவை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்ளலாம் எனவும், மேலும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்கான செலவு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 10% வரை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொரோனா பாதிப்பு குறித்து, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசுவதற்காக சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ”கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான வலுவான திட்டம் ஒன்றைத் தீட்ட வேண்டும். நமது குடிமக்களைக் காப்பதுடன் உலகுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குவோம்” எனப் பதிவிட்டுள்ளார் பிரதமர்.
**-பவித்ரா குமரேசன்**�,