கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவின் வீரியத்தால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனாவால் நேற்று வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,081ஆக இருந்த நிலையில் இன்று 92,182ஆக இருக்கிறது. சீனாவில் 2,945 பேர் உட்பட மொத்தம் 3,131 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும், தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்று உண்டாக்கும் கோவிட்-19 பாதிப்புக்குத் தீர்வு காணும் வகையில் சீனா உட்பட உலக நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தற்போது வரை அதற்கான மருந்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்று (மார்ச் 3), தமிழக மருத்துவர்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத் துவக்க விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “புதிய, புதிய நோய்கள் இப்போது வந்து கொண்டிருக்கின்றன. கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்தே கண்டுபிடிக்கவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படிப்பட்ட வைரசைத் தடுக்க உங்களுடைய திறமையால் தமிழகத்தில் மருந்து கண்டுபிடித்து இந்த நாட்டிற்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” என்று விழாவில் கலந்துகொண்ட மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அப்போலோ நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரதாப் ரெட்டி, டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வேந்தர், ஏ.சி.சண்முகம் என பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டனர்.
**கவிபிரியா**
�,”