vதமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா: விஜயபாஸ்கர்

Published On:

| By Balaji

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்குப் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 1,04,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.524 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை நேற்று வரை 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று மேலும் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கூறுகையில், ”இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஈரானிலிருந்து லடாக் வந்த இருவருக்கும், ஓமனிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், “சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் ஓமனிலிருந்து வந்த 45 வயதான நபருக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சென்னையில் உள்ள சில முக்கிய எம்.என்.சி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களைச் சற்று அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் சிறப்புச் சிகிச்சை வார்டுகள் அதிகரிக்கப்பட வேண்டும், கொரோனா அதிகளவு பரவாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

**கவிபிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share