mதஞ்சாவூரில் 56 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா!

Published On:

| By Balaji

தஞ்சாவூரில் ஒரே பள்ளியில் படிக்கும் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது பொதுமக்களிடையே கவலையை உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிப்பெறும் பெண்கள் பள்ளியில் 20 மாணவிகளுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் 36 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 8 ஆம் தேதி முதல், ஒரு மாணவி பள்ளிக்கு வரவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அது குறித்து விசாரித்தபோது மாணவிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்றது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்து, கடந்த 11 ஆம் தேதி 460 மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சனிக்கிழமை நேற்று முதல்கட்டமாக நடத்தப்பட்ட சோதனையில் 20 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 16 மாணவிகள் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 4 மாணவிகள் திருவாரூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவில், மேலும் 36 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதால் அம்மாபேட்டை மற்றும் தஞ்சாவூர் சுற்றுவட்டாரம் முழுவதும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது..

அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அப்பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. அனைத்து நோய் தடுப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய கல்வித்துறை சுகாதாரத்துறை மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளியில் கொரோனா அதிகரித்து வருவதை அதிகாரிகள் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்க தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்க 35 குழுக்கள் அமைத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் பணியில் மாவட்ட கல்வி துறை இறங்கியுள்ளது.

_சக்தி பரமசிவன்

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share