tகொரோனா பாதிப்பு: ஆம்புலன்ஸ்கள் அதிகரிப்பு!

Published On:

| By Balaji

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் அடுத்த இரு தினங்களில் ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று (ஏப்ரல் 22) புதிதாக 12,652 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 10,37,711 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று மேலும் 3,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது 89,428 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் படுக்கை வசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 108 ஆம்புலன்ஸ் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் அடுத்த இரு தினங்களில் தமிழகத்தில் ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சுகாதாரத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளை மட்டும் அழைத்து வர 210 அவசர வாகனங்கள் இயங்குவதாகவும், தேவைக்கேற்ப இது மேலும் அதிகப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஆம்புலன்ஸ் சேவைக்காக 24 மணி நேரமும் தனி கட்டுப்பாட்டு அறை இயங்குவதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share