கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஊரடங்கு நீட்டிப்புக்கு முன்பாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துவார்.
வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணியளவில் ஆலோசனையைத் தொடங்கினார்.
இதில் உரையாற்றிய அவர், “இதுவரை கோவிட் நோய்த் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காகத் தமிழக அரசு சுமார் 7,162 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளது. தற்போது மாநில அளவில் கோவிட் மருத்துவமனைகளில் 58,840 படுக்கைகளும், கோவிட் சிறப்பு மையங்களில் 77 , 223 படுக்கைகளும் மற்றும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 26 ,801 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. ஐசியு வசதி கொண்ட 4,782 படுக்கைகளும், 5,718 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன.
தமிழகத்தில் தான் மிக அதிகமாக 146 ஆய்வகங்கள், அதாவது 63 அரசு மற்றும் 83 தனியார் ஆய்வகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவரை 45.73 லட்சம் நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தனியார் மையங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணங்களை அரசே நிர்ணயித்துள்ளது.
**தமிழகத்தில் குறைவான இறப்பு விகிதம்**
கோவிட் நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க, கூடுதலாக 15 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 2,751 மருத்துவர்கள், 6,893 செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்றியமையாத மற்றும் உயிர்காக்கும் மருந்துகளான டொஸிலிசுமாப் 400 எம்ஜி, ரெமிடிசிவியர் 100 எம்ஜி, இனாக்சபெரின் 40 எம்ஜி போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இந்திய முறை மருத்துவச் சிகிச்சையும் நோயாளிகளுக்குச் சிறப்பாக அளிக்கப்படுகின்றது. நோய் எதிர்ப்புச் சக்தியினை அதிகரிப்பதற்காகச் சித்த மருந்தான கபசுரக் குடிநீர் பெரும்பான்மையான மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
Pஅரசு எடுக்கும் நடவடிக்கைகளின் மூலம், நாட்டிலேயே சிகிச்சை முடிந்து குணமானவர்கள் 85.45 சதவீதத்திற்கு மேல் உள்ள மாநிலமாகவும், மிகக் குறைவான, அதாவது 1.7 சதவீத இறப்பு உள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.
தமிழகத்திலிருந்து 4,24,394 இடம் பெயர்ந்த தொழிலாளர்களைப் பத்திரமாக அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். மேலும், 80, 779 வெளிநாட்டு வாழ் தமிழர்களை வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளோம்.
கோவிட் ஆர்டிபிசிஆர் பரிசோதனையின்போது மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளோரின் மாதிரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு, விரைந்து முடிவுகளை அறிவித்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவிட் சிறப்பு மையங்களில், சிறப்பான சேவைகளை வழங்க, உணவு, குடிநீர், கழிப்பிட வசதிகளை அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் குறைவான இறப்பு விகிதம் உள்ள போதிலும், இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
இதுவரை நியாய விலை கடை மூலம், சென்னையில் 46 லட்சம் முகக் கவசங்களும், பிற மாவட்டங்களில் 72.56 லட்சம் முகக்கவசங்களும் வழங்கப்பட்டுள்ளன.
**தமிழகத்தில் தொழில் வளர்ச்சி**
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா காலத்தில் கூட, இதுவரை 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழ்நாட்டில் தொடங்குவதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம், சுமார் 31, 464 கோடி ரூபாய் முதலீடும், சுமார் 69, 712 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவுள்ளன.
இந்நடவடிக்கைகளால், ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலங்களில் அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது என்பதை ஒரு தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், வருமானத்தைப் பெருக்கவும், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவித் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இக்காலகட்டத்தில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, 1,53, 576 சுய உதவிக் குழுக்களுக்கு, 5,934 கோடி ரூபாய் வங்கிக் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் தனியே கொரோனா நோய்த் தொற்று காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 67,354 சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் 720 கோடி ரூபாய் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வருமானத்தைப் பெருக்கவும் அக்குழுவுக்குக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளைக் களைய 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனது தலைமையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டங்கள் நடத்தி, உடனுக்குடன் தொழில் நிறுவனங்களுக்குக் கடன்களை வழங்க அறிவுறுத்தியதனால், மத்திய அரசின் கடன் திட்டத்தில் மிக அதிக அளவில், அதாவது சுமார் 7,518 கோடி ரூபாய்க்கான ஒப்புதலினைப் பெற்று இந்தியாவில், தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.
தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால், அரசின் நலத்திட்டங்கள் மக்களைப் பெருமளவில் சென்று சேர்ந்து, மக்களைப் பொருளாதாரப் பாதிப்பிலிருந்து பாதுகாத்தன எனவும், வேலைவாய்ப்பின்மை இரண்டே மாதங்களில், ஆறில் ஒரு பங்காகச் சரிந்துள்ளது எனவும், தனி நபர் வருவாய் படிப்படியாய் உயர்ந்து கொரோனா சூழலால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பிலிருந்து தமிழ்நாடு விரைந்து மீண்டு வருகிறது எனவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளில் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக, 1,433 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6,278 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. போதிய அளவில் வேளாண் இடுபொருட்கள் இருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் கூறியுள்ளனர். எனவே, வேளாண் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, வரலாறு காணாத அளவுக்கு இந்த ஆண்டு வேளாண் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.
மேலும், பருவமழைக்கு முன்னதாகவே நீர்நிலை உட்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், மற்றும் கரைகளைக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் தெரிவித்தார்.
**கவிபிரியா**�,