கொரோனா வைரசால் டெல்லியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி உயிரிழந்ததை அடுத்து , இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் வுகான் மாகாணத்தில் கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தை பகுதியிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. 130 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரசால் 1,45,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,416 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் இந்த வைரசின் வீரியம் குறைந்து வருவதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் கூறப்படும் நிலையில், மற்ற நாடுகளில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளுக்குச் சென்று வந்த இந்தியர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை இந்தியாவில் 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதுபோன்று உயிர்ப்பலி 2ஆக அதிகரித்திருப்பதை உறுதி செய்துள்ளது.
ஏற்கனவே கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது உசேன் என்ற முதியவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், நேற்று (மார்ச் 13) டெல்லியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனாவால் உயிரிழந்தவரின், மகன் 2020 பிப்ரவரி 5 முதல் 22 வரை சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலிக்குப் பயணம் செய்துவிட்டு நாடு திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. அதன் பிறகு காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறியோடு ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் மார்ச் 7ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவரிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினரும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இதில் அவரது தாய்க்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். வைரஸ் பாசிடிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது உடல்நிலை மோசமானது. ஐசியுவுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**கர்நாடகாவை முடக்கிய கொரோனா**
கொரோனாவால் மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, கர்நாடகாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் முதல்வர் எடியூரப்பா. மாநிலத்தில் கோவிட் -19 பரவுவதைத் தடுக்க கர்நாடகா முழுவதும் உள்ள அனைத்து மால்கள், தியேட்டர்கள், விடுதிகள் மற்றும் கண்காட்சிகள் ஆகியவை நாளை தொடங்கி ஒரு வாரத்திற்கு மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இரவு விடுதிகள், நீச்சல் குளங்கள், இசை நிகழ்ச்சிகள், கிளப் நிகழ்வுகள், கோடைக்கால முகாம்கள், திருமணங்கள், மாநாடு, பிறந்தநாள் கொண்டாட்டம் ஆகியவற்றுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் மூடப்படும், ஹோம் டெலிவரிக்கு அனுமதியுண்டு, கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் ஏழு நாள் விடுப்பு அளிக்கப்படுகிறது. மாநிலத்தில் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் நடைபெறும் முழு ஆண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாநில அரசுக்கு உதவப் பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் முன்வந்துள்ளது. இன்ஃபோசிஸ் குழுமத் தலைவர் சுதா மூர்த்தி முதல்வர் எடியூரப்பாவுக்கு அனுப்பிய கடிதத்தில், வைரஸ் அதிக வெப்பநிலையில் உள்ள இடத்தில் பாதிக்காது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் தற்போது கோடைக்காலம். சிங்கப்பூரில் ஆண்டு முழுவதும் வெப்பமாக இருக்கிறது. இருந்தபோதிலும் அங்கு வேகமாக வைரஸ் பரவுகிறது.
ஒருவேளை இந்த தொற்று கர்நாடக மாநிலத்தைப் பாதித்தால், அதனைக் கட்டுப்படுத்த தனியார் மருத்துவமனைகளால் முடியாது. ஆனால் அரசு மருத்துவமனைகளால் முடியும். எனவே 500-700 படுக்கைகள் கொண்ட ஒரு அரசு மருத்துவமனையைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இன்ஃபோசிஸ் குழுமம் சமூக சேவைகளைச் செய்து வருகிறது. மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க இன்ஃபோசிஸ் உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
**தமிழக பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை**
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழகத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று கேரளாவை ஒட்டியுள்ள குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு 5ஆம் வகுப்பு வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
**முக்கிய வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும்**
கொரோனா பாதிப்பு எதிரொலியாக உச்ச நீதிமன்றத்தில் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்குத் தொடர்பாக வழக்கறிஞருடன் ஒருவர் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
**கவிபிரியா**�,