சென்னை மாணவர்களை குறிவைக்கும் கொரோனா!

Published On:

| By Balaji

சென்னையில் அதிகளவில் கல்லூரி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. ஒரேநாளில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில் கல்லூரி மாணவர்களிடையே கொரோனா பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டு வருகிறது.

**எம்ஐடி**

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 1,417 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் முதற்கட்டமாக 67 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று மேலும் 20 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது. அதிலும், 50 பேருக்கு ஒமிக்ரானுக்கான அறிகுறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் காவல் ஆணையர் ரவி ஆகியோர் எம்ஐடி நிறுவனத்திற்கு நேரில் சென்று மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

**கிறிஸ்தவக் கல்லூரி**

சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியின் விடுதியில் உள்ள 139 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்னும் பலரின் முடிவுகள் வரவில்லை. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

**ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி**

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 14 பேர் ஆண்கள், 13 பேர் பெண்கள். சில நாட்களுக்கு முன்பு கூர்க் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்று திரும்பிய மாணவர்களுக்கு சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதுபோன்று, ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றும் 2 டாக்டர்கள், 14 பயிற்சி மருத்துவர்கள், 4 செவிலியர்கள் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

**கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு**

சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மருத்துவக்கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு, தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 43,011 படுக்கைகள் உள்ளன. அதில் தற்போது 1,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் 8,660 படுக்கைகள் உள்ளன. அதில் 921 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 215 பேரும், ஸ்டான்லியில் 138 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 41 பேரும், ஓமந்தூராரில் 120 பேரும், கிண்டி மருத்துவமனையில் 290 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share