தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாத மாவட்டங்கள்!

Published On:

| By Balaji

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், கோவை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று (மார்ச் 3) நிருபர்களிடம் பேசியபோது, “சுகாதாரப் பணியாளர்கள் 75 சதவிகிதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். முன்களப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடக் கூடியவர்கள் தடுப்பூசி போட முன்வர வேண்டும். முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்புள்ளது. 650 அரசு மருத்துவமனைகளிலும் 650 தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது.

இதுவரை நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். மற்றவர்கள் தயக்கம் காட்டும்போது முதியவர்கள் ஆர்வமாக வருவதைப் பாராட்டுகிறேன். சென்னையில் 39,000 தெருக்கள் உள்ளன. இதில் 1,000 தெருக்களில் இருந்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு 5, 6 பேர் தினமும் வருகிறார்கள்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்ட நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், கோவை ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்னும் குறையவில்லை” என்று கூறியவர்,

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசும்போது, “திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் முகக்கவசம் அணியாததைப் பார்க்கும்போது கவலையளிக்கிறது. ஹோட்டல், பஸ், ரயில் பயணத்தின்போதும் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்கிறார்கள். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். உணவு அருந்தும் இடங்களில் நெருங்கி நிற்காமல் சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.

கொரோனா போய்விட்டது என்று யாரும் எண்ண வேண்டாம். மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். தொற்று அறிகுறி இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள். கொரோனா தடுப்பூசி காலாவதியாகிவிட்டது என்று தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.

26 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு நமக்குக் கொடுத்துள்ளது. அனைவரும் தடுப்பூசி போட முன்வர வேண்டும். இதுவரையில் 5.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 வயது மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

**-ராஜ்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share