சிவகங்கையில் ஆயுதப்படை காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது, இங்கு, மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரட்டான்பட்டியைச் சேர்ந்த, ஆயுதப்படை காவலரான யோகேஸ்வரன் பணியாற்றி வந்தார். 2013ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் கோவையில் உள்ள சிறப்புக் காவல்படையில் பணியாற்றி வந்துள்ளார். இதன்பின் 2018ல் சிவகங்கை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட அவர் திருப்பத்தூர் இந்தியன் வங்கியின் காவலராக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கியில் உள்ள பாதுகாவலர்கள் அறையில் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 2) காலை வங்கியின் கழிவறைக்குள் சென்ற யோகேஸ்வரன் எஸ்.எல்.ஆர் எனப்படும் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டு அங்குச் சென்று பார்த்தபோது, யோகேஸ்வரன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்,
வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றும் ஆயுதப்படை காவலருக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது, இந்நிலையில் யோகேஸ்வரனின் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா அல்லது தனிப்பட்ட பிரச்சினை ஏதாவது உள்ளதா எனப் பல கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
**கவிபிரியா**�,