உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 40 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் போரின் தாக்கம் மற்றும் பாதிப்பு சர்வதேச அளவில் எதிரொலித்து வருகிறது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை நிலை இல்லாமல் இருப்பதால் சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல் விலையை விட இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ள நிலையில், போருக்கு முன் 100 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இந்திய நாட்டின் ஒட்டுமொத்த சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் கருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து தான் இந்தியாவுக்கு 90 சதவீத எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய் தயாரிப்பு ஆலைகள் பலவும் தற்போது சூரியகாந்தி விதைகள் இல்லாமல் தவித்து வரும் நிலையில் ஏற்றுமதி இறக்குமதியில் பலத்த இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவினங்கள் அதிகரித்து உள்ளதும் எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
ஆலிவ் எண்ணெயைத் தவிர மற்ற அனைத்தும் மார்ச் மாத இறுதியில் அதிக விலையை எட்டியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் 100 முதல் 125 ரூபாயாக இருந்த சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது 200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட நல்லெண்ணெய் தற்போது 250 ரூபாய்க்கும் , 180 ரூபாய்க்கு விற்கப்பட்ட கடலை எண்ணெய் தற்போது 220 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும் 160 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய் எண்ணெய் தற்போது 200 ரூபாய்க்கும், 110 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரீபைண்ட் ஆயில் தற்போது 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
.