லேகியம் இல்லாமல் தீபாவளியா? தீபாவளி பட்சணங்களுடன் இந்த லேகியமும் முக்கிய இடம் பெறும். பரம்பரை பரம்பரையாகத் தொடரும் இந்த லேகியம், நம் பாரம்பர்யத்தைப் பறைசாற்றும்.
**என்ன தேவை?**
பொடி செய்ய:
சுக்கு – 50 கிராம்
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
அரிசி திப்பிலி – 10 கிராம்
சீரகம் – கால் கப்
ஓமம் – கால் கப்
மல்லி (தனியா) – கால் கப் l
சோம்பு – அரை டீஸ்பூன்.
பாகுக்கு: வெல்லம் – கால் கிலோ
கலக்க: நல்லெண்ணெய் அல்லது நெய் – 2 மேஜைக்கரண்டி.
**செய்முறை**
பொடி செய்ய கொடுத்துள்ள அனைத்தை யும் தனித்தனியாக வெறும் கடாயில் மிதமான தீயில் வாசம் வரும்வரை வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்.
வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டி ஒரு வாயகன்ற கனமான பாத்திரத்தில் ஊற்றி, கொதிக்கவிடவும். கம்பி பதம் வேண்டாம். நன்றாகப் பாகு வாசனை வந்து மேலே பொங்கி கொதிக்கும்போது பொடித்துவைத்துள்ள பொடியைப் போட்டுக் கிளறவும். சுருள வரும்போது கீழே இறக்கிவைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறி காற்றுப் புகாத டப்பாவில் போட்டு, ஆறியவுடன் மூடவும். இல்லாவிட்டால் உள்ளே வியர்த்துப் பூஞ்சை காளான் வந்துவிடும்.
**குறிப்பு**
இந்த லேகியத்தைத் தீபாவளியின்போதுதான் சாப்பிட வேண்டும் என்றில்லை. வயிற்றுவலி, மசக்கை வாந்தி முதலியவற்றுக்கும் மருந்தாகக் கொடுக்கலாம். அப்போது நெய் சேர்க்க வேண்டாம்.�,