கர்நாடக அரசு கொடி டிசைனில் உள்ளாடைகள் – சர்ச்சையில் அமேஸான்!

Published On:

| By Balaji

கர்நாடக அரசு கொடியின் கலரில் பிகினி உடை அமேஸானில் விற்பனை செய்யப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உள்ளாடைகளை விற்பனை செய்த அமேஸான் இ-வணிக நிறுவனத்துக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் எனப் பலரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

அமேஸானில் கர்நாடக அரசு கொடியை வைத்து புதிய ரக பிகினி உடைகள் விற்பனைக்கு வந்துள்ளன. அமேஸானின் இணையத்தளத்தில் இது போன்ற உடைகள் விற்பனைக்கு வந்திருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அமேஸான் கனடா இணையத்தளம் இந்த நீச்சல் உடைகளை விற்பனைக்கு விட்டுள்ளது.

கனடா மட்டுமல்லாது ஜப்பான், இங்கிலாந்து மற்றும் மெக்ஸிக்கோ போன்ற நாடுகளிலும் அமேஸானில் இந்த உடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நீச்சல் உடைகள் கர்நாடக அரசு கொடி டிசைனில் வடிவமைக்கப்பட்டு, கலரும் அதே நிறத்தில் இருக்கிறது. இது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமேஸானின் இந்த உடைகள் விற்பனைக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அமேஸானை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கர்நாடகா ரக்‌ஷனா வேதிகாவைச் சேர்ந்த பிரவீன் ஷெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பெங்களூரில் போராட்டத்திலும் ஈடுபட்டார். போராட்டத்தின்போது அவர் அளித்த பேட்டியில், “கர்நாடகா கொடி பல கோடி கன்னட மக்களின் பிணைப்பாக இருக்கிறது. உலகம் முழுவதும் வாழும் கன்னட மக்களின் உணர்வுகளை அமேஸான் அவமதித்துவிட்டது” என்று தெரிவித்தார்.

இதே போன்று பாஜக அமைச்சர் அர்விந்த் ட்விட்டரில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கூகுள் சமீபத்தில் கன்னட மக்களை அவமதித்தது. அந்த வடு இன்னும் மறைவதற்குள் அமேஸான் கன்னட கொடியின் கலர் மற்றும் டிசைனில் பெண்களுக்கான நீச்சல் உடைகளை விற்பனை செய்து வருகிறது.பன்னாட்டு கம்பெனிகள் இதுபோன்று கன்னடர்களை அவமதிப்பதை நிறுத்த வேண்டும். இது போன்ற அவமதிப்புகளை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அமேஸான் நிறுவனம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்வோம். கர்நாடகா மக்களிடம் அமேஸான் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னட கொடியை அவமதித்த கனடாவுக்கு கன்னடர்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர்.

கூகுளுக்குப் பாடம் கற்பித்த பிறகு தற்போது அமேஸானுக்குப் பாடம் புகட்டியதில் கன்னடர்களின் மாநிலப் பற்று மேலோங்கி நிற்பதை பார்க்க முடிகிறது. இதற்காக கன்னடர்களைப் பாராட்டுகிறேன்.

கன்னடம், கர்நாடக விஷயத்தில் பெரும் நிறுவனங்கள் அலட்சியத்தை வெளிப்படுத்துகின்றன. கூகுள் போன்ற தனியார் நிறுவனங்கள், கன்னடர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். கன்னட விஷயத்தில் அந்த நிறுவனங்கள் அலட்சியமாக செயல்பட்டது ஏன் என்று பதிலளிக்க வேண்டும்.

கன்னட கொடியுடன் மாநில அரசின் அதிகாரபூர்வ முத்திரையும் அவமதிக்கப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசுக்கு இழைத்த அவமானம் ஆகும். இதையொட்டி மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதே சமூக வலைதளத்தில் பலரும் அமேஸானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அமேஸான் இந்தியா இது தொடர்பாக இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share