பாடப் புத்தகத்தில் வரதட்சணை குறித்து கருத்து: கிளம்பியது சர்ச்சை!

Published On:

| By admin

நர்சிங் பயிலும் மாணவிகளின் சமூகவியல் பாட புத்தகத்தில் ‘வரதட்சணையால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பயன்கள்’ என்ற பகுதி பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அந்த புத்தகத்தின் ஆசிரியர் டி .கே இந்திராணி என்பவர் ஆவார். இந்த பாடப்புத்தகம் இந்திய நர்சிங் கவுன்சில் பாடத்திட்டத்தின்படி நர்சிங் பயிலும் மாணவர்களுக்கானது. அந்த பாடபுத்தகத்தின் ஒரு பக்கத்தில், “வரதட்சணையால் ஏற்படும் நன்மைகள்” என்று குறிப்பிடப்பட்டு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் முதல் பயனாக, குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வாகனங்கள் போன்ற வீட்டு உபயோக உபகரணங்களுடன் திருமணமான உடன் ஒரு புதிய குடும்பத்தை நிறுவுவதற்கு, வரதட்சணை உதவியாக இருக்கும் என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

பெண் குழந்தைகளை அதிகம் படிக்க வைத்தால், வரதட்சணை குறைவாக கொடுத்தால் போதும் என்று எண்ணி பெற்றோர் நன்கு படிக்க வைக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடைசியாக அவர் குறிப்பிட்டுள்ளது தான் ஆச்சரியம். அதில், வரதட்சணை அதிகமாக கொடுத்தால், அசிங்கமாக தோற்றம் கொண்ட பெண்களை நல்ல இடத்தில் அல்லது அழகான ஆண்களுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியும் என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை போட்டோவாக எடுத்து அபர்ணா என்பவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்து, இந்த கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிவசேனா கட்சியின் முக்கிய தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான பிரியங்கா சதுர்வேதி, இதுபோன்ற புத்தகங்களை புழக்கத்தில் இருந்து நீக்குமாறு கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதானிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில், “வரதட்சணையின் சிறப்பை விவரிக்கும் ஒரு பாடநூல், உண்மையில் நமது பாடத்திட்டத்தில் இருப்பது நம் தேசத்திற்கும் அதன் அரசியலமைப்பிற்கும் அவமானம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மாணவர்கள் பயிலும் கல்வி புத்தகத்தில் இப்படி குறிப்பிடுவது இளைஞர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் செயல். இதுபோன்று தவறுதலான சமூகக் கருத்துக்களை பரப்புவர்களை சமூக விரோதிகள் என்று தான் சொல்ல வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share