காலாவதியான குளிர்பானம்: புகாரளிக்க வாட்ஸ் அப் எண்!

public

காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் குறித்து புகார் அளிக்க ஏதுவாக உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ் அப் எண்ணை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்ததையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. 5,777 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில், 634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. ரூ.9.02 இலட்சம் மதிப்புள்ள குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 484 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ குளிர்பானங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் வழங்கப்படும் உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்து நிலைகளிலும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் – 2011 இல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.

குளிர்பானங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் குளிர்பானங்களின் தரம் குறித்து ஆய்வு செய்த பின்னரே நுகர்வோர் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்ய வேண்டும்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006, ஒழுங்கு முறைகள்-2011 இன் படி குளிர்பான பாட்டில்கள் மீதுள்ள லேபிள்களில் உணவு பாதுகாப்பு துறை உரிம எண், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் முழுமையான முகவரி, நிகர எடை, பேட்ஜ் எண், தயாரிப்பு தேதி, பயன்படுத்த கூடிய கால அளவு, அனுமதிக்கப்பட்ட இயற்கை நிறங்கள், அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறங்கள் குறித்த தகவல், ஊட்டச்சத்து குறித்த தகவல், சைவ மற்றும் அசைவ குறியீடு உள்ளிட்ட விவரங்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும், குளிர்பான பாட்டில்களில் காலாவதி நாள் உள்ளிட்ட விவரங்கள் குளிர்பான நிறத்திலிருந்து மாறுபட்டு, பார்த்தவுடன் தெளிவாக தெரியும் வகையில் அச்சிட குளிர்பான நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்கள் குளிர்பானங்கள் கடைகளில் வாங்கும் பொழுது மேற்கூறிய விவரங்கள் உள்ளதா எனவும், குறிப்பாக காலாவதி தேதியை சரி பார்த்தே வாங்கி உபயோகிக்க வேண்டும்.

மேலும் தரமற்ற, காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் உள்ள குறைபாடுகள் குறித்து 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அல்லது unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *