தமிழக அரசு சிறந்த ஆட்சியை வழங்குவதாக முதுகுளத்தூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ மலேசியா பாண்டியன் பாராட்டியுள்ளார்.
பரமக்குடி மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் மற்றும் பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (நவம்பர் 21) நடைபெற்றது. நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினா்கள் என்.சதன்பிரபாகா், கருணாஸ், மலேசியா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், “அதிமுக ஆட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் வேறுபாடு பார்க்காமல், யார் எந்த முறையில் மக்களுக்கு சேவையாற்றுகிறார்களோ அதனை ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்த ஆட்சியை சிறந்த ஆட்சி என்று என்னால் சொல்ல முடியும். பொதுமக்கள் நலன் கருதி யார் பாடுபட்டாலும் கட்சி வேறுபாடு இன்றி அதனை ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை” என்று தெரிவித்தார்.
அதிமுக அரசின் நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும், மற்ற தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ மலேசியா பாண்டியன் இவ்வாறு பாராட்டியுள்ளது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.�,