ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
மகாராஷ்டிரம், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இரு மாநிலத்திலும் பாஜக, காங்கிரஸ் பிரதான கட்சிகளாக உள்ளதால், தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதனையடுத்து, இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றிருக்கிறார்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், இதில் எப்படியேனும் வெற்றிபெற காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நான்கு நாட்கள் பயணமாக கம்போடியாவுக்குச் சென்றுள்ளார். அங்கு தியான பயிற்சி மையத்தின் முகாமில் அவர் கலந்து கொள்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இரு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், ராகுல் காந்தி வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இரண்டு முக்கியமான மாநிலங்களுக்குத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், ராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன் எனக் கேள்வி எழுப்பிய பாஜக, இதுதொடர்பாக காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியது.
இந்தச் சூழ்நிலையில் இதுதொடர்பாக டெல்லியில் நேற்று (செப்டம்பர் 7) பேட்டியளித்த காங்கிரஸ் தேசியச் செயலாளர் பிரணவ் ஜா, “இந்திய ஜனநாயக பாரம்பரியத்தில் பொது வாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதில், ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம் மதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தை யார் சர்ச்சையாக்க முயற்சி செய்கிறார்களோ அவர்கள் அவர்களுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மக்களை அல்லது நிறுவனங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று பொருள்” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொது வாழ்க்கையுடன் இணைக்கக் கூடாது” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.�,