மகாராஷ்டிரா: புதிய கூட்டணிக்கான செயல் திட்டம் தயார்!

Published On:

| By Balaji

மகாராஷ்டிராவில் புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில், காங்கிரஸ் – என்சிபி – சிவசேனா கட்சிகள் இடையே குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்கும் வரைவு தயாராகியுள்ளது.

நேற்று (நவம்பர் 14) புதிய கூட்டணி உருவாவது தொடர்பாக மூன்று கட்சிகளும் முதல்கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. இந்த பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பு, இது தொடா்பாக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவா் ஒருவா் கூறுகையில், “குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுப்பது குறித்து மூன்று கட்சிகளும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இது தொடா்பாக கட்சிகளின் மாநிலத் தலைவா்கள் தொலைபேசியில் தொடா்புகொண்டும், நேரில் சந்தித்தும் ஆலோசனை நடத்துகின்றனா். குறைந்தபட்ச பொது செயல் திட்டம் இறுதி செய்யப்பட்டதும் ஒப்புதலுக்காக கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றாா்.

காங்கிரஸ், என்சிபி ஆகிய கட்சிகள் மதச்சாா்பின்மை கொள்கை உடையவை. அதே நேரத்தில் சிவசேனா தீவிர இந்துத்துவ கொள்கை உடையது. அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கும்பட்சத்தில் தங்கள் கட்சியின் கொள்கை விட்டுக்கொடுக்க வேண்டியதிருக்கும் என்பதே காங்கிரஸ், என்சிபி-க்கு முக்கியப் பிரச்சினையாக உள்ளது. சிவசேனாவுடன் கூட்டணி வைப்பதை மக்களிடம் எவ்வாறு முறையாக எடுத்துச்செல்வது என்பது குறித்தும் காங்கிரஸ், என்சிபி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை (நவம்பர் 14) மூன்று கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் இணைந்து குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்கும் கூட்டத்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, இதில் கலந்து கொண்ட சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தற்போது முடிந்த கூட்டத்தில் பொதுவான குறைந்தபட்ச திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. ஒரு வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. வரைவு விவாதத்திற்காக மூன்று கட்சிகளின் உயர் மட்டக் குழுவுக்கு அனுப்பப்படும். இறுதி முடிவு தலைமைக் குழுவால் எடுக்கப்படும்” எனக் கூறினார்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, என்சிபி தலைவா் சரத் பவாா் ஆகியோா் டெல்லியில் வரும் 17ஆம் தேதி நேரில் சந்தித்து இது குறித்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனா்.

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் விரிசல் ஏற்பட்டதும், தேசியவாத காங்கிரஸ்(என்சிபி), காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஆனால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதம் கிடைக்காததால் சிவசேனாவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. அதன் பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தபோதும், அந்த கட்சியாலும் பெரும்பான்மை உறுப்பினர்கள் கடிதத்தை ஆளுநரிடம் அளிக்க இயலவில்லை.

இதனால், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) மாலை முதல் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share