பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

Published On:

| By Balaji

தமிழ்நாட்டில் வியாழன், வெள்ளிக்கிழமைகளைத் தொடர்ந்து சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஒரு வகுப்பில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து சுழற்சிமுறையில் வகுப்புகள் நடைபெறுகிறது. அதனால், சனிக்கிழமைகளிலும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 14, 15 ஆகிய இரு நாள்கள் விடுமுறை அளித்தும், 16ஆம் தேதி சனிக்கிழமை வழக்கம் போல் நேரடி வகுப்புகள் நடைபெறும், ஞாயிறு வார விடுமுறை என்று பள்ளிக் கல்வித் துறை முன்னதாகவே தெரிவித்திருந்தது.

பண்டிகை காலம் என்பதால் வரும் 16ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

இதையடுத்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இன்று(அக்டோபர் 13) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,” பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில், செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் வாரத்தில் ஆறு நாள்களும் செயல்பட்டு வருவதால், மாணவர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகை புரிவதாக தெரிவித்திருந்தனர்.

ஆசிரியர்கள் சிலர், தங்களது சொந்த மாவட்டங்களிலிருந்து தொலைதூரத்தில் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, அக்டோபர் 14,15ஆம் தேதி ஆகிய இருநாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வார இறுதி நாளான அக்டோபர் 16ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.மாணவர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி 16ஆம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு, ஆசிரியர்கள், மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share