கலெக்டர் உத்தரவு: அதே இடத்தில் நடப்பட்ட, தோண்டி வீசப்பட்ட பனைமரம்!

Published On:

| By Balaji

தனியார் செல்போன் நிறுவனத்தின் வசதிக்காக தோண்டி வீசப்பட்ட பனைமரத்தை அதே இடத்தில் நட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன்பேரில் மீண்டும் அதே இடத்தில் பனைமரம் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தும்பேரி அருகில் உள்ள நாயுடுவட்டம் பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் அமைப்பதற்காக கேபிள் வயர் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் செட்டிக்குட்டை பகுதியில் ஒரு பனைமரத்தை அனுமதி இல்லாமல் அடியோடு பிடுங்கி போட்டுள்ளனர். இதை அந்தப் பகுதி மக்கள் கேட்டதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி அனுமதி கொடுத்துதான் நாங்கள் அகற்றினோம் என்று வேலையாட்கள் கூறியுள்ளனர்.

‘பனை மரத்தை வெட்ட தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட மரம் பனைமரம் என்று சட்டம் இயற்றி உள்ளது. எனவே உயரதிகாரிகள் இதைப் பார்வையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹாவுக்கு, வாணியம்பாடி டாக்டர் ஏ.பி.ஜே. பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் புகார் அளிக்கப்பட்டது,

அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக மீண்டும் அதே இடத்தில் தோண்டப்பட்ட பனைமரத்தை மீண்டும் நட செல்போன் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உடனடியாக இரண்டு பொக்லைன் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு மீண்டும் அதே இடத்தில் பனைமரம் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது அந்தப் பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

**-ராஜ்**

.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share