�நாணயத்தை விழுங்கிய குழந்தை: மருத்துவமனையில் அனுமதிக்காததால் உயிரிழப்பு!

public

கேரளாவில் நாணயத்தை விழுங்கிய மூன்று வயது குழந்தையை, மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலுவாவைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை நாணயத்தை விழுங்கியதால் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் பெற்றோர் உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்த மருத்துவர்கள் நாணயம் சிக்கி இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். இருப்பினும் அவர்கள், கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதியில் இருந்து வந்ததால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விளக்கமளித்துள்ள தலைமை மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தால் குழந்தையை எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகக் கூறியுள்ளார். ஆனால் அங்கும் குழந்தைக்கு அனுமதி கிடைக்காமல் ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, குழந்தைக்கு பழங்கள் கொடுக்குமாறு அறிவுறுத்திய மருத்துவர்கள், சிகிச்சை அளிக்காமல் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

கடைசி வரை யாரும் சிகிச்சை அளிக்காததால் குழந்தையின் நிலை மிகவும் மோசமடைந்து, மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியாகி அம்மாநில மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், “குழந்தை உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது” என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார். குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

**-ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *