[கோவை ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா!

public

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னையைத் தொடர்ந்து தற்போது கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் நேற்று 188 பேர் உட்பட 1,480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,131 ஆக உள்ளது. 338 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 10 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

சமீப நாட்களாகக் கோவையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், கோவை ஆட்சியர் ராசாமணி  அதிகாரிகளுடனான ஆலோசனை, கட்டுப்பாட்டு மண்டலங்களை நேரில் பார்வையிடுதல், கட்டுப்பாடுகளை மதிக்காதவர்கள் மீது  நடவடிக்கை எடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.  உடல் சோர்வு மற்றும் சளி காரணமாக நேற்று இரவு அவருக்கு ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது.  கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் மற்றும் உடல் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.  இதில் அவருக்குத் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து இன்று காலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு உடல் சோர்வு மற்றும் சளி ஆகியவற்றைத் தவிர வேறு எந்த அறிகுறியும் இல்லை என்று நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவரது அலுவலகத்தை மூடி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகளில் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவருடன்  நெருக்கமாக இருந்த அதிகாரிகள் குறித்த பட்டியலும் தயாரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் கோவை ஆட்சியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது இன்னும் ஐசிஎம்ஆர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் ஆட்சியர் இவர் என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி, கோவை வருமான வரித்துறை தலைமை ஆணையர் ராஜீவ் விஜய் நாபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜூலை 5ஆம் தேதி டெல்லியிலிருந்து கோவை வந்த ராஜீவ் விஜய் நாபர், ஜூலை 6ஆம் தேதி பணியில் சேர்ந்ததாகவும், அடுத்த நாள் மதுரை சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *