ரேஷன் கடைகளுக்கு ஆய்வுக்குச் செல்வதற்கு முன், அக்கடையில் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களிடம் கடையின் செயல்பாடு குறித்து விசாரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரியாகவும், தரமானதாகவும் வழங்கப்படுவதை உறுதி செய்ய மாதந்தோறும் ஆட்சியர்கள், உணவு வழங்கல் மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
ரேஷன் கடை ஆய்வின்போது அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒவ்வொரு ரேஷன் கடையின் அறிவிப்பு பலகையில், கடையின் பெயர், பணி நேரம், ஊழியர் பெயர் ஆகியவற்றுடன் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, விலை, விநியோகம் பற்றிய விவரங்களும் எழுதியிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
ஆய்வின்போது ரேஷன் கடைகளில் தரம் குறைவான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை உடடியாக கிடங்குகளுக்கு அனுப்பி, தரமான பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் பொருட்கள் இருப்பை சரிபார்த்து இருப்பு குறைவு அதிகம் இருந்தால், ஊழியர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள் ரேஷன் கடைக்கு ஆய்வுக்கு செல்வதற்கு முன், அக்கடையில் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களில் குறைந்தது 10 பேரையாவது சந்தித்து, கடையின் செயல்பாடு மற்றும் வழங்கப்பட்டுள்ள பொருட்களின் அளவு, நாள் ஆகியவை குறித்து விசாரித்து விவரங்களை சேகரித்து கொள்ள வேண்டும். பின்பு ரேஷன் கடைக்கு வந்து கடையில் உள்ள விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, போலி பட்டியல் போடப்பட்டு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,