�ரிலாக்ஸ் டைமில் சாப்பிட சிலருக்கு இனிப்பு வகைகள் பிடிக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் இந்த தித்திப்பான தேங்காய்த் திரட்டுப்பாலைச் செய்து தந்தால் நாக்கைச் சொட்டிக்கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இன்னும் கொஞ்சம் கேட்பார்கள்
**எப்படிச் செய்வது?**
ஒன்றரை டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு கப் தேங்காய்த்துருவல், சிறிதளவு தண்ணீரை விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். ஓர் அகன்ற பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சவும். பால் கொஞ்சம் சூடானவுடன் ஒரு கப் பொடித்த வெல்லத்தைப் போட்டு, ஒரு கிளறு கிளறி அடுப்பை நிறுத்தி விடவும். பிறகு வெல்லப்பொடி நன்றாகக் கரையும் வரை கிளறி வடிகட்டவும். வடிகட்டிய பாலுடன் அரைத்த தேங்காய் – பாசிப்பருப்பு விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கி அடுப்பில் வைத்து, கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். நன்றாகக் கெட்டியானவுடன் அரை கப் நெய்யை ஊற்றிக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தவுடன் சிறிதளவு ஏலக்காய்த்தூளைச் சேர்த்துக் கிளறிவிட்டு அடுப்பை நிறுத்தவும்.
**சிறப்பு**
தேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன. இது எலும்புகள் மற்றும் பற்களை வலுவடைய செய்கிறது. சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும், முகப்பரு மற்றும் தோல் அரிப்பு பிரச்சினைகளைப் போக்கவும் ஒரு சிறந்த நொறுக்குத் தீனியாகத் தேங்காயும் பாலும் அமையும்.�,