தென்னிந்திய உணவுகளில் அதிகமாகப் பயன்படுத்துவது தேங்காய். புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. அதிலிருந்து பால் எடுத்து இந்த சூப் செய்து அருந்துங்கள். புத்துணர்ச்சிப் பெறுங்கள்
**எப்படிச் செய்வது?**
பெரிய வெங்காயம் மூன்று, பச்சை மிளகாய் ஆறு, சிறிதளவு கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் ஒரு கப் பால், நறுக்கிய பச்சை மிளகாய், நசுக்கிய சிறிய துண்டு இஞ்சி, நறுக்கிய கொத்தமல்லித்தழை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் ஒரு கப் தேங்காய்ப்பாலில் சிறிதளவு சோள மாவைச் சேர்த்து கொதிக்கும் கலவையுடன் ஊற்றவும். நன்கு கொதிவந்த பின்பு பாதி அளவு எலுமிச்சையைப் பிழிந்து சாறு ஊற்றி இறக்கி பரிமாறவும்.
**சிறப்பு**
அல்சர், வயிற்று புண்ணால் அவதிப்படுபவர்கள் இந்த சூப் செய்து பருகலாம். விரைவில் நல்ல பலனைத்தரும்.�,