அனல் மின் நிலையங்களில் கிட்டத்தட்ட ஒன்பது நாட்களுக்கு தேவையான 21.55 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உறுதியளித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்ய போருக்குப் பிறகு நிலக்கரி உட்பட எரிபொருளின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. தேவையான நிலக்கரியும் கிடைக்கவில்லை. அதேசமயம் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் மின்தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் ஒரு சில மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் மின் உற்பத்தியும் மின்வெட்டும் பேசுபொருளானது.
இந்த நிலையில் சமீபத்தில், தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு வழிவகை செய்யுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், “தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், தற்போது தினசரி நிலக்கரி வரத்து 50,000 மெட்ரிக் டன்கள் அளவுக்கு மட்டுமே உள்ளது. தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு கவலை கொள்ளத்தக்க அளவுக்குக் குறைந்துள்ளது.
எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த நடவடிக்கையால் மட்டுமே தமிழ்நாட்டில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரிக்க முடியும். இந்த விஷயத்தில் இந்தியப் பிரதமர் அவர்கள் உடனடியாக தலையிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்
இதையடுத்து மின்சார உற்பத்திக்கு போதுமான நிலக்கரியை இறக்குமதி செய்யவும், அதை விரைவாக அனல் மின் நிலையங்களுக்கு கொண்டு சேர்க்கவும் ஒன்றிய அரசு விரைவாக நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அனல் மின் நிலையங்களில் கிட்டத்தட்ட 9 நாட்களுக்கு தேவையான 21.55 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும் ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் கோல் இந்தியா நிறுவனத்தின் கையிருப்புடன், ஒட்டுமொத்தமாக 72.5 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது என்றும் நிலக்கரி பற்றாக்குறை குறித்து யாரும் பீதியடைய தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
**-ராஜ்-**
.