‘கற்பனையாகக் கருத்து கூறக்கூடாது’: ரஜினி குறித்து முதல்வர்!

Published On:

| By Balaji

கட்சியே தொடங்காத நிலையில், கற்பனையாகக் கருத்து கூறக்கூடாது என்று நடிகர் ரஜினி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

திண்டுக்கலில் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், நடிகர் ரஜினி, கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்று கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பியதற்கு, “ அவர் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. இந்த சமயத்தில் தேவையில்லாமல் கற்பனையாகக் கருத்துக் கூறக் கூடாது என்று பதிலளித்தார்.

புதிதாகப் பதவி ஏற்ற தமிழக பாஜக தலைவர் முருகன், நாங்கள் ஆளும் கட்சியை விடக் கூடுதலான சட்டமன்ற உறுப்பினர்களாக 2021ல் இருப்போம் என்று கூறியது குறித்த கேள்விக்கு, எல்லாக் கட்சியினரும் கட்சியை வளர்க்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள் அந்த அடிப்படையில் அவரும் பேசியுள்ளார் என்று குறிப்பிட்டார்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், தேர்தலைச் சந்திக்கலாம் என்று தெரிவித்த அவர், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் சக்தி என்ன என்பதைக் கடந்த தேர்தலிலேயே பார்த்துவிட்டனர். உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் வர ஆரம்பித்து விடுவார்கள் என டிடிவி தினகரன் கட்சி ஆரம்பிக்கும் போது சொன்னார். இப்போதும் அதைத்தான் சொல்கிறார். தேர்தலுக்குப் பிறகு இருப்பார்களா இல்லையா என்று பார்ப்போம் எனத் தெரிவித்தார்.

அப்போது தமிழகத்தில் சிறுபான்மையினர் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர், அவர்களை அச்சத்திலிருந்து வெளி கொண்டுவருவது அரசின் கடமை என்று வைரமுத்து கூறியது குறித்துப் பேசிய முதல்வர், இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சர் தெளிவாகச் சட்டமன்றத்தில் கருத்து தெரிவித்தார் என்றார்.

**கவிபிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share