b> நவோமி பார்ட்டன்
ஜனவரி 17ஆம் தேதியன்று கிளப் ஹவுஸ் சமூக வலைதளத்தில் இஸ்லாமியப் பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசிய உரையாடல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த உரையாடலின் தலைப்பே ‘இந்துப் பெண்களைவிட இஸ்லாமியப் பெண்கள் அழகாக இருக்கின்றனர்’ என்பதுதான்.
இதில் அப்படி என்னதான் பேசினார்கள்? உரையாடலில் ஒருவர், “தலைப்பே தவறானது. ஏனெனில், எல்லா முஸ்லிம் பெண்களுமே இந்துப் பெண்கள்தான். பிறகு எப்படி ஒப்பிடுவது?” என்கிறார். உடனே ஒருவர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்கிறார்.
அதற்கு ஒருவர், “கர் வாப்ஸி (தாய்மதம் திரும்புதல்) செய்தபின் நம்மை போன்ற ஆர்.எஸ்.எஸ் பக்தர்கள் முஸ்லிம் பெண்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் இந்துப் பெண்களாக மாறிவிடுவார்கள்” என்கிறார். அதற்கு இன்னொருவர், “முஸ்லிம்களில் 70% பேர் மதம் மாறியவர்கள்தான்” என்கிறார்.
இதன் பிறகு இன்னொருவரோ, “முஸ்லிம் பெண்களின் உறுப்பைத் தொட்டால் நமது பாவம் தீரும். அதைப் பற்றித் தெரியுமா?” என்கிறார். அதற்கு வேறு ஒருவர், “இதை நான் பரிசோதிக்க வேண்டும். முஸ்லிம் பெண்கள் இங்கு யாராவது இருக்கிறீர்களா?” என்று கேள்வியெழுப்புகிறார்.
இதேபோல இஸ்லாமியப் பெண்கள் குறித்து மிக அருவருக்கத்தக்க வகையிலும், வன்மத்துடனும் உரையாடல் நீள்கிறது. இந்த உரையாடல் மற்ற சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உரையாடலில் பேசியவர்களை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை வலுத்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது டெல்லி காவல் துறை சைபர் பிரிவு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ, 295ஏ, 354ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது நடந்த அடுத்த நாளே மீண்டும் கிளப் ஹவுஸில் இன்னொரு உரையாடலில் ‘பெண்கள் உயர்சாதி ஆண்களைத் திருமணம் செய்ய உரிமை இல்லை’ என்ற தலைப்பில் இன்னொரு விவாதம் நடைபெறுகிறது. இப்படி அவதூறு உரையாடல்கள் கிளப் ஹவுஸில் கிட்டத்தட்ட இயல்பாகிவிட்டன.
**பண்டமாக மாற்றப்படும் பெண்கள்**
அந்த உரையாடலில், பெண்களைப் பண்டமாகச் சித்திரித்து, பெண்ணை நிர்வாணமாக்கித் தலை முதல் கால் வரை இரும்பு கம்பியால் விளையாட வேண்டுமென்கிறார் ஒருவர். எனினும், இந்த விஷயத்தில் அவர் ஜாதி, மதம் பார்க்காமல் பொதுவாகப் பெண்களைத்தான் கூறுகிறார்.
இஸ்லாமியப் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே காரணம், “சாதாரணமாக விளையாட்டாகத்தான் பேசினோம். கிண்டல்தான் செய்தோம். கிண்டல் செய்யக்கூட உரிமை இல்லையா?” என்பதுதான். எல்லாமே விளையாட்டாகத்தான் பேசினோம் என்பது அவர்கள் தரப்பு வாதம்.
இது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட உரையாடல் குறித்து ஏன் இவ்வளவு கொந்தளிப்பு ஏற்படுகிறது என ஆச்சரியப்படுகின்றனர் வழக்கை எதிர்கொண்ட கிளப் ஹவுஸ்வாசிகள். உரையாடலில் மிக மோசமாகப் பேசியவர் 18 வயது மாணவர் என்பது அதைவிட அதிர்ச்சி.
சிக்கியவர்கள் இஸ்லாமியப் பெண்கள் குறித்து வன்மத்துடன் பேசியிருந்தாலும், உள்ளபடியே கிளப் ஹவுசில் ஜாதி, மதம் பார்க்காமல் எல்லாப் பெண்கள் குறித்தும் பொதுவாகவே அருவருப்புப் பேச்சுகளைக் கக்கி வருகின்றனர்.
வெறுப்புப் பேச்சுகள் ஒருபுறம் இருக்க, கிளப் ஹவுஸில் நேரடியாகவே பெண்களுக்குப் பாலியல் வன்புணர்வு மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன. மேலும், பெண்களை எப்படி ஏலத்தில் விற்பனை செய்வது என விளையாட்டாக ஒத்திகையும் பார்த்துள்ளனர்.
இவ்வளவு நடந்தும் ஒரு சிலர் மட்டுமே புகார் கொடுக்க முன்வந்துள்ளனர் அல்லது வெளியாட்கள் யாராவது இந்தக் கொடுமைகளைப் பார்த்து அம்பலப்படுத்தினால் விஷயம் வெளியே வருகிறது. மற்றபடி, பல பெண்கள் பயத்தில் ஒதுங்கிவிடுகின்றனர். வீட்டில் எப்படிச் சொல்லிப் புரியவைப்பது என்ற குழப்பத்திலும் ஒதுங்கிக்கொள்கின்றனர். இதுவே பெண்கள் குறித்துத் தொடர்ந்து தைரியமாக அவதூறாகப் பேசுவதற்கான தைரியத்தைக் கொடுக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, பெயர் தேவையில்லை, படம் தேவையில்லை, சொந்த விவரங்கள் தேவையில்லை, ஏதோவொரு பெயரில் போலியாக இருந்துகொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம், யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற தைரியமே இவர்களுக்கு மூலதனமாக உள்ளது. ஆக, சிவில் சமூகம் எந்த வகையிலும் ஏற்காத விஷயங்கள் எனத் தெரிந்தே போலிப் பெயர் வைத்துக்கொண்டு வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபடுகின்றனர்.
**கிளப் ஹவுஸ் என்னும் கட்டற்ற வெளி**
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொது பயன்பாட்டுக்கு கிளப் ஹவுஸ் சமூக வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. வந்த உடனே கிளப் ஹவுஸுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதில் பலரும் ஒன்றாகச் சேர்ந்து குரல் வழியே உரையாட முடியும். இதில் உங்கள் உண்மையான பெயரை வைக்க வேண்டுமென்ற தேவை இல்லை. போலியான பெயரில் போலி படம் வைத்துக்கொள்ளலாம். திறந்தவெளியில் இருக்கும் உரையாடல் ரூம்களில் தலைப்பு பிடித்தால் சேர்ந்து பேசலாம்.
இந்த ஒரு காரணத்தினாலேயே ஆபாசம், அவதூறு, மதம் சார்ந்த விஷப் பிரச்சாரம், வன்மம் நிறைய அரசியல் பேச்சுகள், மற்ற சமூகங்கள் குறித்த வெறுப்புப் பேச்சு எனப் பொதுவெளியில் பேச முடியாததெல்லாம் கிளப் ஹவுஸில் பேசித் தீர்க்கின்றனர்.
இதேபோல, பெண்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், அதிலும் பெண்கள் சார்ந்திருக்கும் மதத்துக்கு ஏற்ப வன்மப் பேச்சுகள் எனக் கொடுமைகள் ஏராளம். அதிலும், குறிப்பிட்ட பெண்களைப் பிடிக்கவில்லை என்றால் அவர்களின் படம் தவறாகச் சித்திரிக்கப்பட்டு பரப்பப்படும். இதுதான் அவர்களுக்கு ஆண்கள் கொடுக்கும் தண்டனை.
ஒரு ரூமில் இணைந்து வெறுப்பை மட்டும் கக்குவோர் நண்பர்களாகிவிடுகின்றனர். அவர்கள் அதேபோல வேறு வேறு ரூம்களில் இணைந்து தங்களைப் போன்றவர்களுடன் சேர்ந்து ஒரு கும்பலாகிவிடுகின்றனர். இப்போது எல்லோரும் சேர்ந்து வன்மத்தைக் கக்குகின்றனர். இது இயல்புதான் என நினைத்து புதியவர்களும் சேர்ந்துகொள்கின்றனர்.
கிளப் ஹவுஸ் ரூம் உரையாடல்கள் வெறுப்பை உற்பத்தி செய்யும் கூடாரமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த வெறுப்பு உற்பத்தியைத் தடுக்க எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படுவதில்லை என்பது அதைவிடக் கொடுமை.
*
நவோமி பார்ட்டன்
நன்றி: **[தி வயர்](https://thewire.in/rights/clubhouse-and-the-fantasy-of-sexual-violence-against-muslim-women)**
தமிழில்: **புலிகேசி**
.