அறிவாற்றல் சோதனை மேற்கொண்ட ட்ரம்ப்: ரிசல்ட் என்ன?

Published On:

| By Balaji

அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரம் எனப் பல முக்கிய நிகழ்வுகள் பற்றிப் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அறிவாற்றல் சோதனை செய்ததாகவும், கேள்விகள் கடினமாகவும் இருந்ததாகவும் தெரிவித்தது விவாத பொருளாகியுள்ளது.

கடந்த வார இறுதியில், ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளரான கிறிஸ் வாலஸ், அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் ஒரு நேர்காணல் மேற்கொண்டார். இதில் கொரோனா வைரஸ், ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனின் “காவல்துறையைத் திருப்பித் தரும் திட்டம்” மற்றும் அவரது தேர்தல் பிரச்சாரங்கள் குறித்துப் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

தேர்தல் கருத்துக் கணிப்பில், பிடனுக்கு ஜனாதிபதியாக இருப்பதற்கு வலுவான மன திறன் இருப்பதாக வாக்காளர்கள் கருத்து தெரிவித்தது குறித்து விவாதிக்கையில், பிடன் ஒரு அறிவாற்றல் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

தன்னை ஒரு மிகவும் நிலையான மேதை” என்று அறிவித்த அதிபர் ட்ரம்ப், தான் ஒரு அறிவாற்றல் பரிசோதனையை மேற்கொண்டதாகவும், என்னைக் கண்டு மருத்துவர்களே ஆச்சரியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதற்குத் தொகுப்பாளரான கிறிஸ் வாலஸ்

“தானும் அறிவாற்றல் சோதனை மேற்கொண்டதாகவும், அந்த சோதனையில் ‘படத்தில் இருக்கும் யானையை கண்டுபிடியுங்கள்?’ போன்ற எளிமையான கேள்விகள் தான் இடம் பெற்றிருந்தன” என்றும் கூறியுள்ளார்.

இதற்கு ட்ரம்ப், “இல்லை, இல்லை… அது தவறான சித்தரிப்பு. முதல் சில கேள்விகள் தான் எளிமையாக இருந்தது. கடைசி 5 கேள்விகள் கடினமானவை. அதற்கு உங்களால் பதில் அளிக்க முடியாது என்று நான் பந்தயம் கட்டுவேன். பிடனாலும் பதில் அளிக்க முடியாது என்று என்னால் கண்டிப்பாகக் கூற முடியும்” என்று கூறியதுதான் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

நவம்பர் 2020 தேர்தலில் தோல்வியடைந்தாலும் தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்ற ட்ரம்ப்பின் நிலைப்பாடு போன்ற நேர்காணலில் வெளிவந்த மிகவும் தீவிரமான சிக்கல்களை மறைக்கும் ஒரு நகைச்சுவை பரிமாற்றமாக இது பார்க்கப்படுகிறது.

நவம்பர் மாத தேர்தலில், தோல்வியைத் தழுவினால் அதை ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், ”நான் ஆம் என்று சொல்லப்போவதில்லை. பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.

தேர்தல் கருத்துக் கணிப்புகள் பிடன் தான் முன்னிலை வகிப்பார் என்று தெரிவிக்கின்றன. ட்ரம்ப் 15 புள்ளிகள் பின்தங்கியிருப்பார் எனக் கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. அதேசமத்தில் ட்ரம்ப் விமர்சகர்கள், அவரை பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

ஒரு மணி நேரத்திற்கு நீடித்த இந்த நேர்காணல் ஆனது ட்ரம்பின் அலுவலகமான ஓவல் அலுவலகத்துக்கு வெளியே நடைபெற்றது. இந்த வெயில் காலத்தில் தொகுப்பாளர் வாலஸுக்கு வியர்த்துக் கொட்டுவதைக் காண வேண்டும் என்று ட்ரம்ப் விரும்பியதால், நேர்காணல் வெளியே நடத்தப்பட்டதாகவும் ஆனால் சரியான ஆதாரங்களை மேற்கோள் காட்டி வாலஸ் பேசியதால் ட்ரம்ப்புக்கு வியர்த்துக் கொட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் ட்ரம்ப் அறிவாற்றல் சோதனை மேற்கொண்டதாகக் கூறியதற்கும், கடைசி 5 கேள்விகள் கடுமையாக இருந்ததாகத் தெரிவித்ததற்கும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இத்தகைய சோதனைகள் புத்தியை அளவிடுவதற்காக அல்ல, மனக் கூர்மையைச் சோதிப்பதற்காக வழங்கப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றன. சில விமர்சகர்கள் ட்ரம்ப் கூறிய கடுமையான 5 கேள்விகள், “இது எந்த நாள்?” மேலும், நீ எங்கிருக்கிறாய்?” என்பதாக இருக்கும் என்று விமர்சித்துள்ளனர்.

அமெரிக்கா “கொடூரமான மற்றும் பயங்கரமான” இரண்டு “அழகான” உலகப் போர்களை வென்றது போன்ற கருத்துகளைத் தெரிவித்த போதும், அதைக் காட்டிலும் அறிவாற்றல் சோதனை குறித்தே தற்போது நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாவலர் ரிச்சர்ட் ஹைன் தனது ட்விட்டர் பக்கத்தில், வாலஸுடனான ட்ரம்பின் #FoxNewsSunday நேர்காணலிலிருந்து இந்த கிளிப்பின் வேடிக்கையான பகுதி என்னவென்றால், ஒரு யானையை அடையாளம் காண வேண்டிய இடத்தில் அவருக்குச் சோதனை வழங்கப்பட்டது என்பதை அவர் (ட்ரம்ப்) உறுதிப்படுத்துகிறார். ஆனால் அதன் பிறகு சோதனை மிகவும் கடினமாகிவிட்டது என்று கூறுகிறார். அவர் 5 வயதுக் குழந்தையைப் போன்றவர் என்று விமர்சித்துள்ளார்.

*-கவிபிரியா*�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share