சுருக்கு வலை: நடுக்கடலில் மோதிக்கொண்ட மீனவர்கள்!

Published On:

| By Balaji

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்ததாக இரு பிரிவு மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் சிறிய வகை மீன்களும் சிக்குகின்றன. இதனால் மீன் இனம் முழுவதுமாக அழிக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பல இடங்களில் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் அருகே நடுக்கடலில் நாகையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பைபர் படகில் அங்குச் சென்ற வெள்ளப்பள்ளம் மீனவர்கள் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களின் படகுகளை விரட்டிச் சென்று அவர்கள் மீது கற்கள் சோடா பாட்டில் கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் நாகை மீனவர்களும், எதிர்த்தரப்பினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நடுக்கடலில் இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். உடனடியாக கரைக்குத் திரும்பிய அவர்கள் வெள்ளப்பள்ளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலைக் கண்டித்து வெள்ளப்பள்ளத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த வேதாரண்யம் வட்டாட்சியர் சண்முகம், வேட்டைக்காரனிருப்பு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

**கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share