காவலர்களுக்கான விடுப்பு செயலி அறிமுகம்!

Published On:

| By Balaji

சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள விடுப்பு செயலியை (CLAPP) முதல்வர் ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அரசாணையில், ”காவலர்கள் வார விடுமுறையை அந்தந்த காவல் நிலைய பணிச் சூழலைப் பொறுத்து எடுத்துக் கொள்ளலாம். அந்த வாரம் விடுப்பு எடுக்கும் காவலரின் பெயர் விவரங்கள் காவல் நிலைய நோட்டீஸ் பலகையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இது மாற்றுக் காவலரை பணியில் அமர்த்துவதற்கு ஏதுவாக இருக்கும். இதற்கான உத்தரவை டிஜிபி உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று(ஜனவரி 21) சென்னை பெருநகர காவல்துறை உருவாக்கிய விடுப்பு செயலியை (CLAPP) முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த செயலி மூலம் இரண்டாம் நிலை காவலர் முதல் தலைமைக்காவலர் வரை வாரத்தில் ஒருநாள் ஓய்வு தர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இனிமேல் காவலர்கள் விடுமுறை வேண்டி கடிதம் எழுத தேவையில்லை, காவலர்கள் இந்த செயலியை தங்களது செல்போனில் இன்ஸ்டால் செய்து கொண்டு, அதன் மூலம் தங்களுக்கு தேவை ஏற்படும்போது விடுமுறைக்காக விண்ணப்பிக்கலாம். வார விடுமுறை, மருத்து விடுமுறை மற்றும் இதர விடுமுறை கோரி செயலி மூலமே விண்ணப்பிக்கலாம். இந்த செயலியில் பதிவு செய்யப்படும் விடுமுறை விண்ணப்பம் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு சென்று சேரும். அதன் அடிப்படையில் விடுமுறை அளிக்கப்படும். அதனால், காவல்துறையினர் தங்களது விடுப்புகளுக்கான அனுமதியை வீடுகளில் இருந்தபடியே இந்த செயலி மூலம் பெறலாம்.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share