குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. போராட்டம் ஒரு பக்கம் என்றாலும், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பது போன்ற செயல்களும் நடந்து வருகிறது.
**உபியில் ரெட் அலர்ட்**
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் வன்முறை வெடித்தது. மீரட்டில் நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஃபெரோசாபாத், லக்னோ, பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி ஆகிய பகுதிகளிலும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக மாநிலத்தில் 15 மாவட்டங்களில் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் தற்போது வரை 3000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பேருந்தை எரித்ததாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அலிகார் உள்ளிட்ட பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைக்காக மாவட்ட நீதிபதி சந்திரா பூஷன் சிங் ரெட் அலர்ட் நோட்டீஸ் விடுத்துள்ளதாக மூத்த அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் அங்குக் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
**மும்பை**
Salam Mumbai for turning up in large numbers for a peaceful protest against #Citizenship Amendment Act. pic.twitter.com/kWLiRLn61R
— Azmi Shabana (@AzmiShabana) December 19, 2019
ஹம் பாரத் கி லோக் ‘ இயக்கம் சார்பில் மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றைக் கண்டித்து போராட்டம் நடந்தது. இந்தி நடிகர்கள் பர்ஹான் அக்தர், சுசாந்த் சிங் உட்படப் பல பிரபலங்களும், மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.பல்லாயிரக் கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மும்பை நகர் ஸ்தம்பித்துக் காணப்பட்டது.
**டெல்லி**
புகழ்பெற்ற ஜாமா மசூதியில் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு ஜும்மா தொழுகைக்காக ஏராளமான முஸ்லிம்கள் திரண்டனர்.
தொழுகைக்குப் பிறகு அவரவர் வீடுகளுக்கு திரும்ப மறுப்புத் தெரிவித்த அவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் பீம்சேனா தலைவர் சந்திர சேகர் அசாத் உட்படப் பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். ஆள் இல்லா கேமரா மூலம் கண்காணிப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபட்டனர்.
டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இன்று மாலை பேரணி செல்ல முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.
**அமித்ஷா வீடு முன்பு ஆர்ப்பாட்டம்**
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி தலைமையில் போராட்டம் நடத்துவதற்காக ஏராளமான பெண்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டை நோக்கி பேருந்துகளில் சென்றனர். அவரது வீட்டுக்கு முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பெண்கள் தடுப்பு வேலிகளைத் தாண்டி குதித்துச் செல்ல முற்பட்டனர். இதனால் ஷர்மிஸ்தா முகர்ஜி உட்பட அவருடன் வந்த காங்கிரஸ் அணியினரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோன்று பெங்களூரு, அசாம் என நாடு முழுவதும் பல பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
�,”