சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டாலே தனிநபர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ரிப்பன் மாளிகையில் நேற்று (ஜூன் 11) இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார் .
இந்தக் கூட்டத்தில், சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையை மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ள 12 அரசு மற்றும் 18 தனியார் ஆய்வு மையங்களில் பரிசோதனைக்காக வருபவர்களின் பெயர், முகவரி, வயது, பாலினம், குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் கடந்த 15 நாட்களாகத் தொடர்பிலிருந்தவர்களின் விவரங்களை கட்டாயம் மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதன்படி கொரோனா பரிசோதனை செய்யும் நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை 14 நாட்கள் தனிமைப்படுத்தச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், பரிசோதனை மையங்களைக் கிருமி நாசினிகள் கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்றும் வீடுகளுக்குச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவ ஊழியர்களுக்கு உரிய உபகரணங்கள் வழங்க வேண்டுமென்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரிசோதனை செய்த பிறகு முடிவுகள் வருவதற்கு ஒரு சில நாட்கள் தேவைப்படுவதால், கொரோனா பாதித்துள்ளவர்கள் மூலம் மற்றவர்களுக்குத் தொற்று பரவிடக் கூடாது என்பதற்காக இம்முடிவு எடுக்கப்படுவதாகச் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
**-கவிபிரியா**�,