அரசாங்கத்துக்கு ஆட்டம்காட்டும் கார்ப்பரேட்டுகள்!

Published On:

| By Balaji

தமிழ் சினிமாவின் டிஜிட்டல் கேம் – பாகம் 2

**-இராமானுஜம் **

ஆன்லைன் முன்பதிவு சேவை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் திரையரங்குகளை, தமிழக அரசின் சர்வர் மூலம் இணைத்து டிக்கெட் விற்பனையை ஒழுங்குபடுத்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்று சொல்லும் திரையரங்கு உரிமையாளர்கள்,இதற்கு காரணம்

கோடிக்கணக்கான முதலீடு மட்டுமல்ல, கார்ப்பரேட்டுகளுடன் கை கோர்த்துள்ள சில திரையரங்க உரிமையாளர்களின் சுய நலமும் அடங்கியிருக்கிறது என்கின்றனர்.

இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான திரையரங்குகள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு, தரமாக இருப்பதற்கு காரணம் சில நிறுவனங்கள் தான். புதிய படங்களை தியேட்டர்கள் திரையிடுவதற்குத் தேவையான கருவிகளை டிஜிட்டல் தொழில்நுட்ப சேவையைக் கையாண்டு வரும் கியூப், UFO மற்றும் ஆன்லைன் முன்பதிவு சேவையை நிர்வகித்து வரும் TICKETNEW, BOOKMYSHOW ஆகிய நிறுவனங்கள் வழங்கின . தங்கள் தொழில்நுட்பத்தை திரையரங்குகளில் பயன்படுத்துவதற்கு பிரதிபலனாக, தியேட்டரை நவீனப்படுத்துவதற்கு அந்தந்த திரையரங்குகளின் வசூல் தன்மையைப் பொறுத்து வட்டி இல்லாத கடனாக குறைந்தபட்சம் பத்து லட்ச ரூபாயில் இருந்து 50 லட்ச ரூபாய் வரை முன்பணமாக கொடுத்திருக்கிறார்கள்.

அரசு நிர்ணயிக்கும் சர்வரில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்ய இந்தத் திரையரங்குகள் முயற்சித்தால், தங்களது பணத்தை அந்நிறுவனங்கள் திரும்பக்கேட்கும். எனவே, முன்பதிவு சேவை நிறுவனங்களுடனான தங்களது ஒப்பந்தத்தை திரையரங்குகள் திரும்பப் பெறுவதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. ஆன்லைன் முன்பதிவு நடைமுறை தொடங்கியபோது அவர்களது முதலீட்டுக்கு ஏற்ப வருமானம் கிடைக்கவில்லை. எல்லா சிரமங்களையும் கடந்து தொழில் ரீதியாக லாபத்தை எதிர்நோக்கியிருக்கும் சூழலில் ஒரே நாளில் தங்களது ஆதிக்கத்தை TICKET NEW, BOOK MY SHOW ஆகிய நிறுவனங்கள் விட்டுக் கொடுப்பதற்கு தயாராக இல்லை.

இது தொடர்பாக பேசுவதற்கு அரசு அழைத்தபோது, ‘அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் அனுப்பினால் வருகிறோம்’ என இந்நிறுவனங்கள் தெரிவித்தன. “சட்டரீதியாக அனுமதி பெற்று ஒரு டிக்கெட் முன்பதிவு செய்ய வசூலிக்கப்படும் சேவை கட்டணம் 30 ரூபாய். அந்தப் பணத்துக்கு அரசாங்கத்திற்கு முறைப்படி வரி செலுத்தி வருகின்றோம். அந்த 30 ரூபாயில், 13 ரூபாயை திரையரங்குகளுக்கு பங்குத் தொகையாக கொடுக்கின்றோம்.

‘இந்தியா முழுமையும் இந்த நடைமுறை இருக்கின்றபோது, இங்கு மட்டும் எப்படி நாங்கள் விட்டுக் கொடுக்க முடியும்?’ என்கின்றன ஆன்லைன் முன்பதிவு நிறுவனங்கள். அதேநேரம் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் தங்களுக்கு ஆதரவாகப் பேச, வட்டியில்லா கடன் வாங்கிய திரையரங்க உரிமையாளர்களைத் தயார் செய்யும் வேலையும் நடந்து வருகின்றது. தியேட்டர் உரிமையாளர்களுக்கு என்று இங்கு சங்கங்கள் இருந்தாலும், அந்த சங்கக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வதுமில்லை; கறாராக அமுல்படுத்துவதும் இல்லை.

தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்களில் அனைத்து திரையரங்குகளும் உறுப்பினர்களாக இல்லை என்பது தமிழக அரசுக்கு இதுவரை தெரியாது என்கின்றனர் ஒரு தரப்பினர்.

அமைச்சர்களுடன் தங்களுக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி சிலர் தங்களை திரையரங்கு உரிமையாளர்களின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்த சூழலை தமிழக அரசும், ஆன்லைன் முன்பதிவு நிறுவனங்களும் தங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பதற்கு பயன்படுத்திக்கொள்ளும் முயற்சியும் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டுமென்றால் அரசாங்கத்தை அனுசரித்துப் போகவேண்டும். அதற்காக மந்திரிகளை கவனித்துவிட்டால் இது சம்பந்தமாக எந்தவிதமான மேல் நடவடிக்கையும் தொடராது என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கூறப்பட்டிருக்கிறது. திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் ஒரு பிரிவினர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறையைக் கட்டாயமாக அமல்படுத்துவதை கைவிட வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தப் போவதாக கூறுகின்றனர்.

தற்போது ஆன்லைன் முன்பதிவு மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதில், சத்யம் சினிமாஸ் நடத்திவரும் திரையரங்குகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாகத்தில் உள்ள சில திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் டிக்கெட் கணக்குகள் மட்டுமே தவறுகள் இன்றி தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் கிடைக்கிறது. மற்ற திரையரங்குகளில் இருந்து உண்மையான கணக்குகளை பெறுவதில் சிரமம் நீடிக்கிறது.

இதுபோன்ற சூழல் ஆந்திராவில் இருந்தது. இதனை சரிசெய்வதற்கு என்ன வழி என்று அரசு பலகட்ட ஆலோசனை நடத்தி ஆன்லைன் முன்பதிவு நிறுவனங்கள் பாதிக்காத வகையில் நல்லதொரு முடிவை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியது அது என்ன?

அடுத்த பாகத்தில்….

முந்தய பாகம்: [ஆன்லைன் டிக்கெட்: கார்ப்பரேட் கேமில் தமிழ் திரைப்படங்கள்!](https://minnambalam.com/k/2019/09/30/109)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share